
தென் மாவட்டங்களில் நடந்த நிதி நிறுவன மோசடி தொடர்பான புகார்களை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்குகளில் தொடர்புடைய நிறுவனங்களின் இயக்குனர்கள் பெற்ற ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும், முதலீட்டு தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, நிதி நிறுவன மோசடி வழக்குகள் நீண்ட நாளாக நிலுவையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி, நிதி நிறுவன மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகையை திருப்பி செலுத்தும் வகையில் விதிகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நிதி நிறுவன மோசடி செய்கிறவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நிதி நிறுவன மோசடி வழக்கில் குறிப்பிட்ட தொகை வரையிலான மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. நிதி நிறுவனத்தின் வருவாய் ஆவணங்களை நேரடியாக ஆன்லைனில் பெறவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
மோசடி செய்த நிதி நிறுவன சொத்துகளை விற்பனை செய்து அந்த தொகையை 30 நாட்களுக்குள் கோர்ட்டில் செலுத்த வேண்டும். நிதி நிறுவன மோசடி வழக்கு மற்றும் புகார்களை விரைந்து முடிப்பதற்காக சமூக பாதுகாப்புத்திட்ட ஆணையரை தனி அதிகாரியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், சொத்துகளை கோர்ட்டின் அனுமதி பெற்று மின்னணு ஏலம் நடத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை பொருளாதார குற்றப்பிரிவுக்கு அரசு வழங்கி உள்ளது என்று கூறி அது தொடர்பான ஆவணங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுத்த அரசுக்கும் அரசு தரப்பு வக்கீல்களுக்கும் இந்த கோர்ட்டு பாராட்டுகளை தெரிவிக்கிறது. இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.