நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்; மும்மொழி கொள்கை ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

1 month ago 16

திருவள்ளூர்: திருவள்ளூர் ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்காக ஜெ.என்.சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ.2.49 கோடி மதிப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டுமான பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். இதன்பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக எங்களுக்கான கண்காணிப்பு அதிகாரியாக பதவி ஏற்று உள்ளார். துணை முதலமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக ஆய்வுக் கூட்டத்திற்கு செல்வதால் அவரிடம் வாழ்த்து தெரிவித்தேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேகம் எடுக்கிறார். அவர் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நாங்களும் உழைத்துகொண்டு இருப்போம். கல்விக்கான நிதியை ஒதுக்கக்கோரி ஒன்றிய அரசிடம் துறையின் அமைச்சராக இரண்டு முறையும் முதலமைச்சரும் நேரிலும் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார்.

கல்விக்கான நிதி ஒதுக்குவதில் தயவுசெய்து ஒன்றிய அரசு அரசியல் பார்க்கக் கூடாது. 45 லட்சம் மாணவர்களின் எதிர்காலம், 15 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம், 32298 ஊழியர்களின் எதிர்காலம் என எல்லாவற்றையும் வலியுறுத்தி உள்ளோம். ஆனால் ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையிலே பிடிவாதமாக உள்ளது. நாம் என்றுமே மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாத மாநிலமாக இருந்து வருகிறோம். அத்தகைய கொள்கை பிடிப்போடு தான் தமிழக முதலமைச்சரும் இருந்து வருகிறார். இவ்வாறு கூறினார். ஆய்வின்போது எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு, ஆணையர் (பயிற்சி) அபர்ணா நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

 

The post நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்; மும்மொழி கொள்கை ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article