நிஜ்ஜார் படுகொலை விவகாரம்: கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேர் வெளியேற்றம்

3 months ago 23

ஒட்டாவா,

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் பயங்கரவாதி என கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்நிலையில், காலிஸ்தான் உறுப்பினரான நிஜ்ஜார், சர்ரே நகரில் குருத்வாரா ஒன்றிற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூனில் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் தன்னிடம் உள்ளன என அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடோ கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் இந்தியா மறுத்தது. உள்நோக்கத்துடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என கூறியதுடன், கனடாவில் பயங்கரவாதிகளுக்கும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கும் இடம் அளிக்கப்படுகிறது என கனடாவை இந்தியா குற்றம்சாட்டியது.

இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்து உள்ளனர் என கனடா குற்றச்சாட்டை தெரிவித்தது.

இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்ததுடன், கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு இன்று சம்மன் அனுப்பி, அந்நாட்டிலுள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்பது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்தது. இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Read Entire Article