உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு

8 hours ago 3

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சிகள் பெரும் சக்தியாக உள்ளன. இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, மாறி மாறி வெற்றியும் பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். இதனால், ஜனநாயக கட்சியை சேர்ந்த பைடனின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

டிரம்ப் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை, பல்வேறு உலக நாடுகள் மீது கடும் வரி விதிப்பு, எல்லையை பலப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் என கூறி அதற்காகவே நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன என்றார். இதேபோன்று, அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக புதிய துறையை உருவாக்கினார்.

இதன்படி, டிரம்ப் தலைமையிலான அரசில் அரசாங்க திறனுக்கான துறை (டி.ஓ.ஜி.இ.) ஒன்று உருவாக்கப்பட்டது. வரி செலுத்தும் மக்களின் பணம் பாதுகாக்கப்படவும், அமெரிக்காவின் கடனை குறைக்கவும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோக தடுப்புக்காகவும், அரசில் வீணடிப்பு மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்திலும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவராக டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். எனினும், டிரம்புடன் மோதல் போக்கு ஏற்பட்டதில் அந்த பதவியில் இருந்து மஸ்க் விலகினார்.

இதன்பின்னர் டிரம்புக்கும், எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. அது வார்த்தை போராக மாறியது. ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற பெருமளவு நிதியுதவி செய்தேன் என்றும் ஆனால் டிரம்ப் நன்றி கெட்டவர் என்றும் மஸ்க் கூறினார். ஆனால், மஸ்கிற்கான சலுகைகள் மற்றும் மானியங்கள் நிறுத்தப்படும் என பதிலுக்கு டிரம்ப் மிரட்டினார்.

இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை மஸ்க் உருவாக்கி உள்ளார். இதன் வழியே அவர் தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.

நம்முடைய நாடு வீணாகி கொண்டிருக்கிறது என்றும் கொள்ளையடிக்கப்படும் சூழல் காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கே திருப்பி கொடுக்கப்படுவதற்காக அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்படுகிறது என அவர் பதிவிட்டு உள்ளார். இதனால், டிரம்புக்கு போட்டியாக எலான் மஸ்க் தன்னுடைய புதிய கட்சியை எந்த அளவுக்கு பயன்படுத்துவார் என பார்ப்பதற்காக அந்நாட்டு மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

By a factor of 2 to 1, you want a new political party and you shall have it!When it comes to bankrupting our country with waste & graft, we live in a one-party system, not a democracy.Today, the America Party is formed to give you back your freedom. https://t.co/9K8AD04QQN

— Elon Musk (@elonmusk) July 5, 2025
Read Entire Article