
வதோதரா,
5 அணிகள் கலந்து கொண்டுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் மும்பையை வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகி விருது நிகி பிரசாத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் டெல்லி கேப்டன் மெக் லானிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இதுபோன்ற மன அழுத்தம் நிறைந்த நாள் ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன். முதலில் மும்பை அணி பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்ம் போது அவர்கள் 200 ரன்களை எட்டுவது போல் இருந்தனர். ஆனால் ஷிகா பாண்டே சிறப்பாக பந்துவீசி எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்.
அதன்பின் நாங்கள் பேட்டிங்கிலும் சிறப்பான தொடக்கத்தைக் பெற்றிருந்தோம். இருப்பினும் மும்பை அணி ஒருகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் எங்களை அழுத்ததிற்கு தள்ளினர்.
நிகி கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு ராதா யாதவும் சிக்ஸர் அடித்து உதவினார். டி20 என்பது தாக்கத்தை ஏற்படுத்தும் விளையாட்டாகும், இன்று நாங்கள் அதைச் சிறப்பாகச் செய்தோம் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.