நாளை மே தினம்: தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!

3 hours ago 1

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை மே தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உழைப்பின் மேன்மையினையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம், உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் 'மே' தினமாகும்.

"வாழ்க்கை என்றொரு பயணத்திலே

வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி"

என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள், மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கிய கருத்துகளை என்றும் உள்ளத்தில் பதிய வைத்து உழைப்பின் மேன்மையினை இந்த இனிய `மே தின திருநாளில் போற்றி பெருமிதம் கொள்வோம்.

உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும் மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது இதயமார்ந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 139 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே 1-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தனர்.

நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க.வின் தொழிலாளர் விரோத போக்கு இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார தேக்க நிலையினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உண்டு. ஆனால், நிவாரணத் தொகை வழங்காமல் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில், நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறது.

எனவே பணமதிப்பிழப்பு, பொருத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், பொருளாதார பேரழிவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1-ம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவுகூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள் பாட்டாளிகள் தான். உலகின் ஆக்கும் சக்தி பாட்டாளிகள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம், இந்த மாநிலம் இயங்காது. இதற்கு காரணமான பாட்டாளிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால், உழைக்கும் பாட்டாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.

ஒவ்வொரு நாளும் மே முதல் நாளில் பாட்டாளிகள் நாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்பது தான். இதை மனதில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக போராடுவதற்கு இந்நாளில் பாட்டாளிகள் அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகத்தை உயர்த்துவதற்காக உழைக்கும் பாட்டாளிகளை போற்றும் மே நாளைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள பாட்டாளிகளுக்கு தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதேபோல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.

உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவது தான் உண்மையான சமூகநீதியாகும். நாட்டின் வளர்ச்சியாக இருந்தாலும், நிறுவனங்களின் வளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு அடித்தளமாக திகழ்பவர்கள் தொழிலாளர்கள் தான். அவர்கள் வலிமையாக இல்லாவிட்டால், அவர்களை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட எந்த சாம்ராஜ்யமும் சரிந்து விடும். இதை உணர்ந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணிக்காலம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தும் வழங்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் 136 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்பட்டது போன்ற போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க பாட்டாளிகள் அனைவரும் தயாராவோம் என்று கூறி, மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

வருடத்தின் 365 நாள்களில் ஒரு சில நாள்களே உலகம் முழுமையும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான நாள்கள் ஆகும். அத்தகைய திருநாள்களில் ஒன்றுதான் 'மே' திங்கள் முதல் நாள் ஆகும். 'தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்' என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும். காலம் காலமாகப் பாரம்பரியமாக வசந்தகால விழாக்கள் கொண்டாடப்படும் நாளாக இருந்த மே முதல் நாள், 1899-ம் ஆண்டு முதல் பன்னாட்டு சோசலிச மன்றத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மனிதகுல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள். தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயமார்ந்த மே நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மேதின நாளில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள், அறிவுத் துறை தொழிலாளர்கள் ஆண், பெண் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

1890-ம் ஆண்டிலிருந்து மே தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு, இனம், மொழி, மதம், சாதி என எந்த வித்தியாசமும் பாராமல் உலகம் முழுக்க கொண்டாடப்படும் ஒரே திருநாள் மே தினம் தான். தமிழ்நாட்டில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு, சிந்தனை சிற்பி தோழர் சிங்காரவேலர் 1923-ம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக மே தின விழாவை கொண்டாடி தொடக்கி வைத்தார்.

நாட்டின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியாக விளங்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பன்னாட்டு குழும நிறுவனங்களின் நவீன கொத்தடிமை நிலைக்கு தள்ளப்படும் துயரம் ஏற்பட்டுள்ளது. நான்கு தலைமுறைகளாக போராடி பெற்ற 44 தொழிலாளர்கள் சட்டங்கள் முடமாக்கப்பட்டு, முதலாளிகளுக்கு சாதகமான 4 சட்டத் தொகுப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நீண்ட காலம் போராடி பெற்ற ஓய்வூதியம் இன்று கானல் நீராகிவிட்டது.

இந்தியாவில் அம்பானி, அதானி, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் சொத்துக் குவிப்புக்கு சலுகைகளும், சகல உரிமைகளும், பாதுகாப்பும் கொடுத்து, உழைப்பவர் உரிமையை பறித்து அன்றாடக் கூலிகளாக்கி, மக்களின் கவனம் அந்த திசைக்கே செல்ல விடாமல் எப்போதும் மதம், வழிபாட்டுத் தலம், சிறுபான்மை அபாயம், தேசியவாதம் என்று மட்டுமே போலியாக பேசி, பரவ முயற்சிக்கும் பெரும்பான்மை மத பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தை பாதுகாக்க மேதின நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள் மே தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில் வளம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொழில் வளர முக்கிய தூண்களாக இருப்பது தொழிலாளர்களே அந்த தொழிலாளர்களுக்கென கொண்டாடப்படும் இந்த உழைப்பாளர் தின நன்னாளில் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article