
திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் சுமார் ரூ.480 கோடி திட்டத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதனை கடந்த மே மாதம் 9-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என இதற்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய பஸ் நிலையம் ஜூலை 16-ந் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருச்சி மத்திய பஸ் நிலையத்தை முனையமாக கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பஸ்கள் மற்றும் டவுன் பஸ்களும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்திற்கு நாளை (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை, திருப்பதி மார்க்கம்
இதன்படி சென்னை, திருப்பதி, வேலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், புதுச்சேரி மார்க்க வழித்தடங்களில் இருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பஸ்களும் நெ.1 டோல்கேட், பழையபால்பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து பஸ்களும் இதே வழித்தடத்தில் பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
தஞ்சாவூர், கும்பகோணம் வழித்தடம்
தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால் வழித்தடங்களில் இருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பஸ்களும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு செல்லவேண்டும். பின்னர் இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
நாமக்கல், சேலம், பெங்களூரு
நாமக்கல், சேலம், பெங்களூரு வழித்தடங்களில் இருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பஸ்களும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதே வழித்தடத்தில் திரும்ப செல்லவேண்டும்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமேசுவரம் மார்க்கம்
புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமேசுவரம் வழித்தடங்களில் இருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பஸ்களும் விமான நிலையம், டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதே வழித்தடத்தில் மீண்டும் திரும்ப செல்ல வேண்டும்.
கரூர், திருப்பூர், கோவை மார்க்கம்
கரூர், திருப்பூர், கோவை வழித்தடங்களில் இருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பஸ்களும் சத்திரம் பஸ் நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், வ.உ.சி.சாலை, மத்திய பஸ் நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதே வழித்தடத்தில் மீண்டும் திரும்பச் செல்லவேண்டும்.
மணப்பாறை, திண்டுக்கல், குமுளி மார்க்கம்
மணப்பாறை, திண்டுக்கல், குமுளி வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பஸ்களும் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதே வழித்தடத்தில் மீண்டும் திரும்பச் செல்ல வேண்டும்.
மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மார்க்கம்
மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி வழித்தடங்களில் இருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பஸ்களும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். மீண்டும் இதே வழிதடத்தில் மேற்கண்ட ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.
டவுன் பஸ்கள்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களும் மத்திய பஸ் நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் இருந்தும் இதே வழிதடத்தில் திரும்ப செல்லவேண்டும்.
ஆம்னி பஸ்கள்
மத்திய பஸ் நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை அனைத்தும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தின் அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
உள் வருகை, வெளிச்செல்கை
அனைத்து பஸ்களும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்குள் வரும்போது காவல் சோதனை சாவடி எண்.2 (சி.பி-2) வழியாக சென்று பஸ் நிலையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும். ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து பஸ்களும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று `யூ டர்ன்' எடுத்து செல்ல வேண்டும்.
பெரம்பலூர்-அரியலூர்
பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பஸ்கள் வழக்கம் போல் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.