சென்னை: சென்னையில் 14, 15, 16 ஆகிய மண்டல பகுதிகளில் நாளை முதல் 26ம் தேதி வரை குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெலியிட்ட அறிக்கை: நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட சில பகுதிகளில் வரும் 21ம் தேதி (நாளை) முதல் 26ம் தேதி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மண்டலம் -13 (அடையாறு) திருவான்மியூர், மண்டலம் -14 (பெருங்குடி) கொட்டிவாக்கம் பகுதியில் மார்ச் 21, 23, 25 ஆகிய தேதிகளிலும், மண்டலம் -15 (சோழிங்கநல்லூர்) ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, உத்தண்டி, மண்டலம் -14 (பெருங்குடி) பெருங்குடி, பாலவாக்கம், காரப்பாக்கம், மண்டலம் -15 (சோழிங்கநல்லூர்) சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைபாக்கம் ஆகிய பகுதிகளில் மார்ச் 22, 24, 26 ஆகிய தேதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post நாளை முதல் 26ம் தேதி வரை சென்னையில் 14, 15, 16 மண்டலங்களில் குழாய் குடிநீர் நிறுத்தம்: வாரியம் தகவல் appeared first on Dinakaran.