நாளை மறுநாள் குடமுழுக்கு.. "களைகட்டும் திருப்பரங்குன்றம்"

5 hours ago 1


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை மறுநாள் (14-ந் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட 75 குண்டங்களில் அக்னி வார்க்கப்பட்டு வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் 2-ம் கால யாக சாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாக சாலை பூஜையும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் குவிந்து, பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

யாக சாலையில் 150 சிவாச்சாரியர்கள் பங்கேற்றனர். இதற்கிடையில் 7 பெண் உள்பட 85 ஒதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணம் நடந்தது.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலையில் 4-ம் கால மற்றும் மாலையில் 5-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் மாலையில் 6-ம் கால மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

நாளை மறுநாள் (ஜூலை 14ம் தேதி) அதிகாலை 5.25 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலில் கம்பீரமான 125 அடி உயரம் கொண்ட ஏழு நிலையான ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் பொருத்தப்பட்டு பளிச்சிடுகின்றன. ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. குடமுழுக்கிற்காக ரூ.2.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் அங்கு கும்பாபிஷேக நிகழ்வு களை கட்ட தொடங்கி உள்ளது. 

திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை

மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 14-ந் தேதி அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது. 14-ந் தேதி அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article