
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடலின் நடுவே ரூ.545 கோடி மதிப்பீட்டில் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் பாலத்தில் ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டன. கடலில் கப்பல்கள் செல்லும்போது பாலத்தின் நடுப்பகுதி செங்குத்தாக தூக்கப்படும். பின்னர் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும்.
இந்த நிலையில், இன்று கப்பல்கள் செல்வதற்காக பாலம் செங்குத்தாக தூக்கப்பட்டது. பின்னர் பாலத்தை இறக்கும்போது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே பணியாளர்கள், பாலத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாலத்தை கீழே கொண்டுவந்தாலும், அது உடனடியாக தண்டவாளத்துடன் இணையவில்லை. ரெயில்வே ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கோளாறை சரி செய்தனர்.
பாம்பன் புதிய பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுப்புரம் இண்டர்சிட்டி ரெயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. அதேபோல, தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். பாலம் திறந்த இரண்டு மாதங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.