நாளை மறுநாள் கார்த்திகை திருநாள்.. அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதியை வணங்குவோம்

1 month ago 3

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுதான், அதற்கான அடிப்படையாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கந்த புராண தகவல்

விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் இடையே, 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களின் பிரச்சனை சிவபெருமானிடம் சென்றது. சிவபெருமான் தன்னை ஒரு தீப வடிவமாக மாற்றி, விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். அவரது அடி, முடியில் ஒன்றை யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அடியைத் தேடி வராக (பன்றி) வடிவம் எடுத்து விஷ்ணுவும், முடியைத் தேடி அன்னப் பறவை உருவம் கொண்டு பிரம்மனும் புறப்பட்டனர். பல நூறு ஆண்டுகள் கடந்தபிறகும் கூட, அவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடியையோ, முடியையோ காண முடியவில்லை. இதனால் தான் ஈசனை, 'அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதி' என்று அழைக்கிறோம்

இறுதியில் இருவரும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஜோதி வடிவில் அருட்காட்சி வழங்கியதுபோல, அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டினர்.

அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதி

மகா விஷ்ணு மற்றும் பிரம்மனால் சிவபெருமானின் அடி, முடியை காண முடியாத அளவுக்கு அக்னியாக எழுந்ததால், ஈசனை, 'அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதி' என்று அழைக்கிறோம்

மேற்கண்ட நிகழ்வு நடைபெற்ற இடம் திருவண்ணாமலை திருத்தலம் என்பதால், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் மாலை வேளையில், 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் உயர்ந்து நின்ற சிவபெருமான் தான், இங்கு மலை வடிவில் இருப்பதாக ஐதீகம்.

தீப வழிபாடு

திருவண்ணாமலை சென்று தீப வழிபாடு செய்ய அனைவராலும் இயலாது. அதே நேரம் இறைவனை தங்கள் வீட்டிலும் ஜோதி வடிவில் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அனைவரது வீடுகளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வணங்குகிறார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாள் நாளை மறுதினம் (13.12.2024) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றி அடி முடி காண முடியாத அருட்பெருஞ்சோதியின் அருளைப் பெறுவோம்.

Read Entire Article