*மாணவ, மாணவிகள் உற்சாகம்
நாகர்கோவில் : தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வருகிற 13ம் தேதி போகி பண்டிகை ஆகும். 15ம்தேதி மாட்டு பொங்கலும், 16ம்தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி 14ம்தேதி முதல் 16ம்தேதி வரை விடுமுறை ஆகும். இதில் 17ம் தேதியும் தற்போது அரசு விடுமுறை ஆகும். 18, 19ம் தேதி சனி, ஞாயிறு ஆகும். இதே போல் இன்று (11ம்தேதி) சனி, நாளை (12ம்தேதி) ஞாயிறு ஆகும்.
எனவே 13ம்தேதி (திங்கள்) ஒரு நாள் விடுமுறை எடுத்தால் 9 நாட்கள் விடுமுறை ஆகும். பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் வரும் 13ம்தேதி போகி பண்டிகை நாளில் அதிகம் பேர் விடுமுறை எடுத்துள்ளனர். இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நேற்று காலையில் நடந்தது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
கோணம் அரசு கலைக்கல்லூரியிலும் பொங்கல் வழிபாடு நடந்தது. பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்றனர். பி.ஏ. வரலாறு படிக்கும் மாணவர் சஞ்சய் என்பவர் காரை வாயால் கயிறு கட்டி பின்னோக்கி இழுத்து சாதனை படைத்தார்.
மாணவ, மாணவிகள் கை தட்டி வரவேற்று உற்சாகப்படுத்தினர். மாணவர்கள் வேஷ்டி, சட்டை, மாணவிகள், சேலையிலும் வந்திருந்தனர். பாரம்பரியத்தை பறைச்சாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோட்டார் ஏழகரம் பள்ளியிலும் பொங்கல் விழா நடந்தது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசு அலுவலகங்களிலும் பொங்கல் விழா நடந்தது. நாகர்கோவிலில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஜென்கின் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்திலும் நேற்று பொங்கல் விழா நடந்தது. மின் வாரிய பொறியாளர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளும் நடந்தன.
இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் குமரி மாவட்டத்தில் விற்பனைக்காக குவிந்து உள்ளன. மதுரை மாவட்டம் மேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்புகள் ஒழுகினசேரியில் உள்ள அப்டா மார்க்கெட், வடசேரி மார்க்கெட்டுகளில் குவிந்துள்ளன. ஒரு கரும்பு ரூ.60 வரை விற்பனையாகிறது.
வடசேரி, ஒழுகினசேரியில் இருந்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் கரும்பு லோடு செல்கிறது. மஞ்சள் கிழங்குகள் அம்பை, திண்டுக்கல் பகுதியில் இருந்து விற்பனைக்காக வந்துள்ளன. பனங்கிழங்குகளும் விற்பனைக்காக குவிந்துள்ளன.
The post நாளை மறுதினம் போகி பண்டிகை குமரி பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம் appeared first on Dinakaran.