வேலூர்: குடியரசு தினத்தை முன்னிட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் இன்று முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பை ஒன்றிய அரசு பலப்படுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடம் இடங்களான சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கிய ரயில்நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அந்தந்த மாநில ரயில்ேவ போலீசாரும் பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தி வருகின்றனர்.
சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் முக்கிய நகரங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், தமிழக ரயில்வே போலீசாரும் இணைந்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று காலையில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மற்றும் கருவிகளை கொண்டு தீவிர சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரயில் நிலையம் எதிரே உள்ள கார் பார்க்கிங், டூவீலர் பார்க்கிங், ரயில் நிலைய பிளாட்பார பகுதிகளில் சோதனை செய்தனர்.
இதேபோல் சென்னை மற்றும் வடமாநிலங்களில் இருந்து வந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளையும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். காட்பாடி வழியாக கடந்து செல்லும் ரயில்களிலும் திடீர் சோதனை செய்கின்றனர். இந்த சோதனை வரும் 26ம்தேதி நள்ளிரவு வரை என 24 மணிநேரமும் நடக்கும் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
டெல்லிக்கு பார்சல் அனுப்ப தடை
டெல்லிக்கு செல்லும் ரயில்களில் பார்சல் அனுப்ப நாளை மறுநாள் வரை தடை விதித்து ரயில்வேத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் டெல்லிக்கான பார்சல் புக்கிங் இன்றுடன் நிறுத்தப்பட்டது. காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து டெல்லிக்கு பார்சல் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு பார்சல் புக்கிங் நடந்தாலும், அந்த பார்சல்கள் அனைத்தையும் ஆர்பிஎப் போலீசார் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். நாளை வரை இந்நிலையே நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post நாளை மறுதினம் குடியரசு தினவிழா; ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு: பயணிகளின் உடமைகள் சோதனை appeared first on Dinakaran.