நாளை நள்ளிரவு முதல் தடைக்காலம் அமல்: டெல்டாவில் 1.45 லட்சம் மீனவர்கள் முடக்கம்

1 day ago 5

நாகை: தமிழகத்தில் நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் டெல்டாவில் 3080 விசைப்படகுகள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாது. 1.45 லட்சம் மீனவர்கள் 61 நாட்களுக்கு வீடுகளில் முடங்குவர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். இதன்படி தமிழ்நாட்டில் இந்தாண்டு மீன்பிடி தடைகாலம் நாளை (14ம் தேதி) நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

எனவே பாரம்பரிய மீன்பிடி கலன்கள் தவிர விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்க கூடாது. மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் நாளை இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்குதளத்துக்கு கரை திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற நாகை, தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் பகுதியில் 750 விசைப்படகுகள் உள்ளது. இந்த விசைப்படகு மீனவர்கள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் 61 நாட்களுக்கு மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் 60,000 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடியில் 1,500 விசைப்படகுகளில் 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். நாளை முதல் மீனவர்கள், ெதாழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையிழப்பர்.

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினத்தில் 151 விசைப்படகுகள் உள்ளது. இந்த படகுகளில் மீன் பிடிக்க செல்லும் 10 ஆயிரம் மீனவர்கள் நாளை முதல் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 280 விசைப்படகு, ஜெகதாப்பட்டினத்தில் 100 விசைப்படகுகள் உள்ளது. இந்த விசைப்படகுளில் மீன் பிடிக்க செல்லும் 15,000 மீனவர்கள் மற்றும் காரைக்காலில் 300 விசைப்படகளை சேர்ந்த 5,000 மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். ஒட்டுமொத்தமாக டெல்டாவில் 3,080 விசைப்படகுகள் நாளை முதல் 61 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்லாது. 1.45 லட்சம் மீனவர்கள் வீடுகளில் முடங்கி கிடப்பர். தடை காலத்தில் மீனவர்கள் வலை, படகுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவர்.

தடைகாலம் காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8000 நிவாரணம் வழங்குகிறது.

The post நாளை நள்ளிரவு முதல் தடைக்காலம் அமல்: டெல்டாவில் 1.45 லட்சம் மீனவர்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article