சென்னை: துரை வைகோ அறிக்கை குறித்து வைகோ உடன் ஆலோசனை மேற்கொண்டதாக மதிமுக பொருளாளர் செந்திலதிபன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மதிமுகவின் நிர்வாக குழு நாளை கூடும் நிலையில் அக்கட்சியின் முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் கானும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றி என் மனம் விரும்பவில்லை.
எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன. ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ. இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் துரை வைகோ ராஜினாமா கடிதம் தொடர்பாக நாளை நடைபெறும் மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ முக்கிய முடிவு எடுப்பார் என்று அக்கட்சியின் பொருளாளர் செந்திலதிபன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது; இது முழுக்க முழுக்க உட்கட்சி விவகாரம், துரை வைகோ விலகல் விவகாரத்தில் சமாதானம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது. எதுவாக இருந்தாலும் நாளை நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் வைகோ அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார். நாளை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவும் பங்கேற்பார்” என்று கூறினார்.
The post நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்: மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி appeared first on Dinakaran.