![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38438336-palani.gif)
பழனி,
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7 மணிக்கு கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரையாகம் நடைபெற்றது. பின்பு வேல், மயில், சேவல், சந்திரன் உருவம் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கோவிலில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு கோவில் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கொடிப்படத்திற்கு பூஜை நடைபெற்றது.
பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் கொடிகட்டி மண்டபத்தில் எழுந்தருளினார். மேலும் கொடிப்படமும் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை, கொடிப்படத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு காலை 10.50 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா', 'கந்தனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
பழனியில் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் காலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் ரதவீதிகளில் உலா வருகிறார். அதேபோல் இரவு 7.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, பெரியதங்கமயில் மற்றும் தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
இந்நிலையில் திருவிழாவின் 6-ம் நாளான நாளை (திங்கள் கிழமை) இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளிரதத்தில் சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நாளை மறுநாள் 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பூசத்தன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 11.15 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளுகிறார்.
மாலை 4.45 மணிக்கு வடம் பிடித்தலை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் 10-ம் நாளான 14-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவிற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவியில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். கூட்டத்தால் பழனியில் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி தைப்பூச விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்