
ஊட்டி,
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன்படி இந்தாண்டுக்கன மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 16-ந் தேதி தொடங்கி 21-ந் தேதிவரை நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் மலர் கண்காட்சிக்கான அனைத்து பணிகளையும் முடிக்க முடிவு செய்து இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 5 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) ஊட்டி செல்கிறார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை வழியாக ஊட்டி செல்கிறார். அங்கு 15-ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
அதன்படி, பொதுமக்கள் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்குகிறார். இதைத் தவிர்த்து தொட்ட பெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றுகிறார். ஊட்டி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ம் தேதி இரவு அல்லது 17-ம் தேதி காலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.