
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என இன்று அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், இதனை வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் தெரிவித்து கொள்கிறேன்.
என்னுடன் இத்தனை நாட்கள் உண்மையாய், உறவாய் பழகிய அத்தனை உறவுகளுக்கும் நன்றி என்றும் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியால் விலகினேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில ஆடியோக்கள் வெளியாகி இருந்தன.
இதனிடையே நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவது என காளியம்மாள் முடிவெடுத்து விட்டார் என்றும், அடுத்து எந்த கட்சிக்கு செல்வது? என்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்பட்டது.
இதேபோன்று சமீபத்தில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டு காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அழைப்பிதழ் அப்போது வைரலானது. இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை காளியம்மாள் அறிவித்து உள்ளார்.