
மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து எடுத்து வருகின்ற நடவடிக்கைகளின் பலனை இப்பொழுது கண்கூடாக நாம் பார்த்து வருகின்றோம்.
நேற்று வெளியான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நேரத்தில், சில கருத்துக்களை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். மத்திய அரசுப்பணிகளைப் பொறுத்தவரை, 2016-ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 மாணவர்கள் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். ஆனால், 2016-க்கு பிறகு அந்த எண்ணிக்கைப் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக, 2021-ல், மட்டும் 27 தமிழர்கள் மட்டுமே மத்திய அரசினுடைய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றிப் பெற்றார்கள்.
இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவை கடந்த 2023-ம் ஆண்டு நாம் துவங்கினோம். சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்கீழ் செயல்படும் இந்தப் பிரிவுக்காக முதல்-அமைச்சர் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இதன்மூலம் UPSC Prelims தேர்வுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வின்மூலம் 10 மாதங்களுக்கு தலா 7,500 ரூபாயும், Mains exam-க்கு தயாராகும் மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 47 தமிழ்நாட்டு மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெற்றார்கள். இது முந்தைய ஆண்டுகளைவிட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகமானதாகும்.
அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்கள். அவர்களில் 18 பேர் நான் முதல்வன் உறைவிடப் பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் என்பதை இங்கே நான் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த தம்பி சிவச்சந்திரன் UPSC தேர்வில், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 23-வது இடத்தையும் பிடித்திருக்கின்றார். அதேபோல், தங்கை மோனிகா அகில இந்திய அளவில் 39-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கின்றார். UPSC Prelims மற்றும் Mains தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்காக புதுடெல்லி செல்ல வேண்டும். அப்படி செல்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் பயிற்சி மற்றும் பயணச் செலவிற்காக தலா 50,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்ற அந்த வரலாற்றை மீண்டும் நிலைநாட்டுகிற வகையில், நான் முதல்வன் திட்டம் இதே உறுதியோடு செயல்படும். இந்த நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை பேருக்கும் இப்பேரவையின் வாயிலாக நம்முடைய அன்பையும், வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்வோம். IAS, IPS, IFS என மக்களுக்கான சேவையில் ஈடுபடவுள்ள நம்முடைய இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களுடைய பணி சிறக்கட்டும் என்று இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.