*கலெக்டர் விளக்கம்
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகல்வித்துறை சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் ‘நான் முதல்வன்’ உயர்கல்வி வழிகாட்டி திட்ட 2ம் நாள் முகாம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா மாணவ மாணவியரிடையே பேசியதாவது:
குமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்ற 23,628 மாணவ மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுதியுள்ளீர்கள். மாணவர்கள் முதலில் மருத்துவப்படிப்புகளை தான் தேர்வு செய்து, நீட் தேர்வு எழுதியுள்ளீர்கள். இரண்டாவது தேர்வு பொறியியல் படிப்பை தேர்ந்தெடுப்பார்கள்.
கல்லூரி தேர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்து படியுங்கள். மாணவர்களாகிய நீங்கள் விண்ணப்பிக்கும் போது, கடந்த நான்காண்டுகளில் கல்லூரியின் தரம், தேர்ச்சி சதவீதம், பாடப்பிரிவு, கல்வி கட்டணம் குறித்த விவரங்களை தெளிவாக கேட்டறிய வேண்டும்.
மாணவர்கள் அனைவரும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் அதிகளவு பாடப்பிரிவுகளில் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன் வாயிலாக கல்வி கடன் உதவிகள் பெற எந்தவித இடர்பாடுகளும் ஏற்படாமல் இருக்கும்.
வேறு பல்கலைக்கழகங்களில் சேரும் போது கல்விக்கடன் பெறுவதற்கு பல்வேறு இடையூறுகள் இருக்கும். பெற்றோர் வீட்டு கடன், தொழில்கடன் உள்ளிட்ட கடன்கள் வாங்கியிருந்தால் நமக்கு கல்விக்கடன் தர வங்கிகள் முன்வர மாட்டார்கள். எனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் சேர்ந்தால் எளிதாக கல்விக்கடன் பெற முடியும்.
நீங்கள் பொறியியல் கல்வியை தேர்ந்தெடுத்தாலும் சரி, மருத்துவம் சார்ந்த கல்வியை தேர்ந்தெடுத்தாலும் சரி நீங்கள் கவுன்சிலிங் மூலமாக தேர்வு செய்யுங்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் பட்டபடிப்புகளுக்கு, பொறியில் படிப்பிற்கு இணையான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்ற போது கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புற்கும் ஏராளமான நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குகின்றன.
தமிழ்நாட்டில் 80 சதவீதம் பேர் பட்டதாரிகள். குமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக கல்லூரிகளில் பட்ட படிப்பு படிக்க வேண்டும். பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளில் சேர்வது வரை உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
பெற்றோர்களால் படிக்க வைக்க இயலவில்லை என்றால் அரசாங்கம் அக்குழந்தையை கல்வி கற்க வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு படிக்கு மேல்சென்று 12ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் கட்டாயமாக கல்லூரி படிப்பை படிக்க வேண்டும்மென்று கூறி, அதற்கான நடவடிக்கைகளாக நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்புதல்வன், உயர்படிப்புக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி, மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வழிவகை மேற்கொண்டு வருகிறது.
நல்ல கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் போது அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சேர்ந்து பயன்பெறலாம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பெறுகின்ற வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராமலெட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆறுமுக வெங்கடேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், மாவட்ட கல்வி அலுவலர் நாகர்கோவில் கிறிஸ்டல் ஜாய், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பள்ளிக்கல்வி) சாரதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மரிய பாக்கிய சீலன், மாதிரிப்பள்ளி ஆசிரியர் சுரேந்திரன், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவ மாணவியர் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* மாணவர்கள் அனைவரும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் அதிகளவு பாடப்பிரிவுகளில் கவுன்சிலிங்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
* அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் சேர்ந்தால் எளிதாக கல்விக்கடன் பெற முடியும்.
* குமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக கல்லூரிகளில் பட்ட படிப்பு படிக்க வேண்டும்.
* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பெறுகின்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
The post ‘நான் முதல்வன்’ உயர்கல்வி வழிகாட்டி திட்ட முகாம் கல்விக்கடன் எளிதாக பெறுவது எப்படி? appeared first on Dinakaran.