நான் பேசி வந்த கருத்துகளை திரையில் கண்டது பெருமிதமளிக்கிறது - 'வேட்டையன்' படத்துக்கு சீமான் பாராட்டு

3 months ago 21

சென்னை,

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'வேட்டையன்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. கல்வி முறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் போலி என்கவுண்டர் குறித்தும் பேசும் இந்த படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் 'வேட்டையன்' திரைப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்த்திரையுலகின் பெரும் புகழ் கொண்ட திரைநட்சத்திரம், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் கதாநாயனாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் சமூக அவலங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் கண்ணாடியாக வெளிவந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திரைக்கலை என்பது பொழுதுபோக்குவதற்கு அல்ல, நல்ல பொழுதாய் ஆக்குவதற்கு என்பதையும் தாண்டி, நாம் வாழும் சமூகத்தில் படர்ந்துள்ள பழுதை நீக்குவதற்கு என்பதை இத்திரைப்படம் மூலம் நிறுவியுள்ளார்கள்.

ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அன்புத்தம்பி ஞானவேல் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்றறிந்தபோதே சமூகத்திற்கு நற்கருத்தைப் போதிக்கும் திரைப்படமாக வேட்டையன் வெளிவரும் என்று தம்பி தமிழ்க்குமரனிடம் தெரிவித்தேன். நான் எதிர்ப்பார்த்தது போலவே சமூக அக்கறை கொண்ட ஆகச்சிறந்த திரைப்படமாக வேட்டையன் வெளிவந்துள்ளது.

நாட்டில் கல்வியின் பெயரால் நடைபெறும் கட்டணக் கொள்ளை குறித்தும், போலி என்கவுன்டர்(Fake Encounter) மூலம் நீதியும், மனிதமும் ஒருசேர கொல்லப்படுவது குறித்தும் தொடர்ச்சியாகப் பல மேடைகளில் நான் பேசி வந்த கருத்துகளை திரையில் கண்டது மிகுந்த பெருமிதமளிக்கிறது. இந்தியப் பெருநாட்டின் இரண்டு உச்ச நட்சத்திரங்களைக் கொண்டு தம்பி ஞானவேல் தன்னுடைய நேர்த்தியான படைப்பின் மூலம்தான் சொல்ல நினைத்த கருத்தை மிக எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான சமமான, சரியான கல்வி தரப்படாதபோது, ஒரே மாதிரியான நீட் போன்ற சமூக அநீதியான கொடுந்தேர்வினைத் திணித்து, அதன் மூலம் கல்வியின் பெயரால் நடைபெறும் பல்லாயிரம் கோடிகள் கொள்ளையையும், மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்க அரசாங்கமே திட்டமிட்டு நடத்தும் போலி என்கவுன்டரால் சாகடிப்படும் நீதியையும், காவல்துறை தேடித்தேடி வேட்டையாடும் வேட்டையர்கள் அல்ல, அவர்கள் சமூகத்தைக் காக்கும் பாதுகாவலர்கள் என்பதையும் காட்சிகளால் உணர்த்தி ஆகச்சிறந்த படைப்பினைத் தந்துள்ள இயக்குநர் ஞானவேல் மற்றும் திரைப்படத்தில் பங்காற்றியுள்ள அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

சமூக அக்கறை கொண்ட வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article