
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோவை மாவட்டத்தில் தொடங்குகிறார். அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறார்.
வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். பா.ஜனதா சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
வன பத்திரகாளி அம்மன் கோவிலை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சாலை மண்டபத்தில் விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, காந்தி சிலை அருகே 'ரோடு ஷோ' மூலம் மக்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். மக்களுடன் உரையாடுகிறார்.
மாலை 6 மணியளவில், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சந்திப்பு அருகே மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, காரமடை சந்திப்பு, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது.
இரவு 8 மணிக்கு, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட நரசிம்பநாயக்கன் பாளையம் துடியலூர் ரவுண்டனா, கோவை சக்தி சாலை சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் மத்தியில் உரையாற்றும் எடப்பாடி பழனிசாமி இரவு 10 மணிக்கு கோவையை வந்தடைகிறார். மக்கள் சந்திப்பு பகுதிகளில், பிரசார வேன்களில் சென்றபடியே மக்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடித வடிவிலான அறிக்கை வருமாறு:-
'மக்களை காப்போம்' 'தமிழகத்தை மீட்போம்' என்கிற புரட்சிப் பயணத்தை உங்களின் முழு ஆதரவோடு எழுச்சிப் பயணமாக ஆரம்பித்திருக்கிறேன். கட்சியின் ஒவ்வொரு கடைக்கோடித் தொண்டனையும், இந்த பயணத்தில் எனது இதயத்தோடும் எண்ணத்தோடும் இணைந்து பயணிக்க அழைக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து, மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடிக்கும் கட்சியால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
சொன்ன வாக்குறுதிகளில் இன்னும் பெரும்பாலான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அதனால்தான், தமிழக மக்கள் கோபத்தில் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.
அ.தி.மு.க.வின் உயிர்த் தொண்டர்களான உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற எனது இந்தப் புரட்சிப் பயணத்தில் நாம் எழுச்சியோடு சொல்ல வேண்டியது, தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் செய்த சேவைகளைத்தான், அதன்மூலம் தமிழ்நாடு அடைந்த பலன்களைத்தான்.
தமிழ்நாட்டு மக்களைக் காக்க உங்களில் ஒருவனாக முன்நின்று, முன்கள வீரனாக முன்னே செல்கிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த வெற்றிப் பயணத்தில் என்னோடு இணைந்து ஈடு இணையற்ற சிப்பாய்களாக நீங்கள் வர வேண்டும். தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் நாம் எழுச்சியோடு செல்ல வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி மலரட்டும். இதை தமிழகமே வாழ்த்தட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.