
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்த அமலாபாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014-ம் ஆண்டில் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. அதன்பிறகு படங்களில் நடிப்பதை அமலாபால் குறைத்தார். பின்னர் தொழில் அதிபர் ஜெகத் தேசாய் என்பவரை, அமலாபால் 2023-ம் ஆண்டில் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இளய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது.
திருமணம், குழந்தைகள் என்று மாறியதற்கு பிறகு படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அமலாபால் தனது மனம் திறந்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
"நானும், என் கணவரும் கோவாவில்தான் முதன்முறையாக சந்தித்தோம். அவர் குஜராத்தி என்றாலும், கோவாவில்தான் வசித்து வந்தார். அவருக்கு தென்னிந்திய படங்கள் பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் நான் ஒரு நடிகை என்பதே அவருக்கு தெரியாது. நானும் அதை காட்டிக்கொள்ளவில்லை.
சில நாட்களுக்கு பின்தான் அவருக்கு நான் நடிகை என்பதே தெரிய வந்தது. கர்ப்ப காலத்தில்தான், என்னுடைய படங்களை அவர் பார்த்தார். அவருக்கு விருது நிகழ்ச்சிகளை பார்ப்பது மிகவும் பிடிக்கும். நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், சிவப்பு கம்பளத்தில் நடந்ததையும் அவர் பார்த்து வியந்தார்" என்று அமலாபால் கூறினார்.