‘நான் செத்தால் அழக்கூடாது… சந்தோஷமாக இருக்கணும்’ 96 வயது மூதாட்டி விருப்பப்படி ஆடல், பாடலுடன் இறுதிச்சடங்கு: உசிலம்பட்டி அருகே ஆச்சர்யம்

4 weeks ago 5


உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே 96 வயது மூதாட்டியின் இறுதிச்சடங்குகளை, குடும்பத்தினர் ஆடல், பாடலுடன் உற்சாகமாக நடத்தியது விநோதமாக இருந்தது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி பரமத்தேவர். 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். மனைவி நாகம்மாள் (96), மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளுடன் வசித்து வந்தார். முதுமை காரணமான உடல்நலக்குறைவால் அவர் நேற்று மரணம் அடைந்தார். இரு மகன்கள், நான்கு மகள்களை பெற்றதுடன், மூன்று தலைமுறைகள் கண்ட இவருக்கு பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளு பேரன், பேத்திகள் மட்டும் 78 பேர் உள்ளனர்.

நாகம்மாள் உயிருடன் இருந்தபோது, ‘‘நான் இறந்தால், குடும்பத்தினர் யாரும் அழக்கூடாது, நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த என்னை சந்தோஷமாக நீங்கள் வழியனுப்ப வேண்டும்’’ என்று, குடும்பத்தினரிடம் ஏற்கனவே கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், பேரன், பேத்திகள் இணைந்து ஆடல், பாடல் நிகழ்ச்சி, குடும்ப பெண்களின் கும்மியாட்டம் மற்றும் சிறுவர், சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தினர். பின்னர் அவரது இறுதிச்சடங்குகளை செய்து முடித்தனர். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘நான் செத்தால் அழக்கூடாது… சந்தோஷமாக இருக்கணும்’ 96 வயது மூதாட்டி விருப்பப்படி ஆடல், பாடலுடன் இறுதிச்சடங்கு: உசிலம்பட்டி அருகே ஆச்சர்யம் appeared first on Dinakaran.

Read Entire Article