நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

3 months ago 19

சென்னை: கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் என எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எந்த நிலையிலும் திமுகவே மூச்சு என்று வாழ்ந்த கொள்கைச் செல்வம் முரசொலி செல்வம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் – செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம்.

கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர். அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். “முரசொலி சில நினைவுகள்” என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.

அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.

சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்! செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே… திராவிட இயக்கத்தின் படைக்கலனே… கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்! என அதில் கூறப்பட்டுள்ளது.

The post நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article