
மும்பை,
விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ரோகித் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் ஓய்வை அறிவித்தது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரோகித் சர்மா ஒதுக்கி வைக்கப்பட்டார். அப்போதே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 38 வயதான ரோகித் சர்மா 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ரோகித் சர்மாவை நிச்சயம் விளையாட வைத்திருப்பேன் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஐ.பி.எல். போட்டியின்போது ரோகித்தை நான் அடிக்கடி பார்த்தேன். ஆனால் அவரிடம் பேசுவதற்கு போதுமான நேரம் கிடைக்காது. ஒரு சமயம் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அது மும்பையில் என்று நினைக்கிறேன். அப்போது அவரிடம், 'நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், நிச்சயம் அந்த ஆட்டத்தில் உங்களை விளையாட வைத்திருப்பேன்' என்றேன்.
ரோகித் சர்மா ஒரு மேட்ச் வின்னர். அந்த ஆட்டத்தில் டாப்-வரிசையில் அவர் 35-40 ரன்கள் எடுத்திருந்தால் தொடர் சமனில் கூட முடிந்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஸ்டைல் இருக்கிறது. நான் இருந்திருந்தால் சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா களம் கண்டு இருப்பார்" என்று கூறினார்.