நானோ உரத்திற்கு காப்புரிமை! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாதனை…

2 months ago 10

சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற அதிக பயன்தரக்கூடிய வேளாண் இடுபொருட்களை உருவாக்குவதற்காக 2010-ஆம் ஆண்டில் வேளாண் நானோ தொழில்நுட்ப மையத்தினை நாட்டிலேயே முதன்முதலாக ஆரம்பித்த பெருமை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தையே சாரும். பல்கலைக்கழகத்தின் கலைநுணுக்க வசதியுடன் கூடிய இம்மையத்திலிருந்து இத்தகைய புதுமையான உரத்தினை வெளியிடுவதில் மிகவும் மகிழ்வதாக இப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.நம்நாட்டில் இதுவரை 12 நானோ உரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் திரவநிலையில் உள்ளவை. அத்துடன் அவற்றை இலைவழியாகத் தெளிப்பதில் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆனால் இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நானோ உரமானது எளிதாகப் பயிர்களால் உறிஞ்சக்கூடிய, விரைவாகக் கிரகிக்கப்படக்கூடிய சுற்றுச் சூழலுக்குகந்த மற்றும் உற்பத்தியைப் பெருக்கக்கூடிய தன்மை கொண்டவை.இலைவழியாகத் தெளிக்கக்கூடிய நானோ உரங்களுக்கு மாற்றாக மண்ணில் இடக்கூடிய நானோ உரமாகக் கண்டறிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது முன்னோடி முயற்சியினை மேற்கொண்டது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு தனித்துவமானதாகவும் புதுமையாகவும் விளங்கியதால் எளிதாகக் காப்புரிமம் பெற்றுள்ளது. ஊடுருவல் உலை ஆய்வின்படி வழக்கமான யூரியாவிலிருந்து தழைச்சத்து வெளியீடு நான்கு நாட்களில் முடிவடைகிறது. ஆனால் இந்த புதியவகை நானோ யூரியாவில் 33 சதவீத தழைச்சத்தானது 30 முதல் 35 நாட்களுக்கு இலேசான கடினத்தன்மையுள்ள மண்ணில் வெளியிடப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நானோ யூரியாவை உருவாக்கி காப்புரிமம் பெற்ற வேளாண் விஞ்ஞானிகளான மேனாள் ஆராய்ச்சி இயக்குநரும் நானோ தொழில்நுட்ப மையத்தின் முதல் தலைவரும் மற்றும் ஐதராபாத்தில் இயங்கும் கோரமண்டல் பன்னாட்டு நிறுவனத்தின் அறிவியல் ஆலோசகருமான முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன். அவரது மாணவி முனைவர் எம். லதா மற்றும் இந்த நானோ யூரியாவின் மூலக்கூறு வடிவமைப்பை உருவாக்கிய முனைவர் ஜெயசுந்தர சர்மிளா ஆகியோரை இப்பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார். உயிரித் தொழில்நுட்பத்துறையின் விதிமுறைகளில் உருவாக்கப்பட்ட இந்த நானோ உரமானது வர்த்தகரீதியாகக் கொண்டு செல்லும்முன் பரந்த அளவில் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

The post நானோ உரத்திற்கு காப்புரிமை! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாதனை… appeared first on Dinakaran.

Read Entire Article