திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது காதலியான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற இளம்பெண்ணால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் அவருக்கு உடைந்தையாக செயல்பட்ட அவரது தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரை குற்றவாளிகளாக நெய்யாற்றின்கரை கோர்ட்டு கடந்த 17-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில் தண்டனை விவரம் நேற்று முன் தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் கோர்ட்டு கூடியது. அப்போது குற்றவாளிகளான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, கிரீஷ்மாவிடம் ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என கேட்டார். அப்போது, கிரீஷ்மா நீதிபதியிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார்.
அந்த கடிதத்தில், "எனக்கு தற்போது 24 வயது ஆகிறது. ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். மேலும் படிக்க விரும்புகிறேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனவே குறைந்த பட்ச தண்டனை வழங்க கேட்டு கொள்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், "கிரீஷ்மா ஈவு, இரக்கமற்றவர், அவருக்கு கருணை காட்ட தேவையில்லை. அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தண்டனை விவரங்களை இன்று (20-ந்தேதி) அறிவிப்பதாக கூறி ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் காதலனை கொன்ற வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அவரது மாமா நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் கடத்தல் குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், விசாரணையைத் தவறாக வழிநடத்த முயன்றதற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் காதலில் கிரீஷ்மாவுக்கு விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை நெய்யாற்றின்கரா கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.எம். பஷீர் வழங்கினார்.
முன்னதாக விசாரணை நீதிமன்றம் கிரீஷ்மாவை ஐபிசி பிரிவுகள் 364 (கடத்தல் அல்லது கடத்தல், கொலைக்குக் காயப்படுத்துதல்), 328 (விஷத்தால் காயப்படுத்துதல்), 302 (கொலைக்கான தண்டனை) மற்றும் 201 (ஆதாரங்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என கூறியிருந்தது. அவரது மாமா நிர்மலாகுமாரன் நாயரும் பிரிவு 201 (ஆதாரங்களை மறைத்தல்) இன் கீழ் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் அவரது தாயார் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.