சேலத்தில் இன்ஜினியரிங் படித்தேன். பின்னர் பல ஊர்களில் வேலைக்கு சென்றேன். கொரோனாவுக்குப் பிறகு ஆத்தூர் வந்த நான் முழு நேரமாக கோழி வளர்ப்பில் ஈடுபட்டேன். பூர்வீகமாக விவசாயக் குடும்பம் என்பதால் பண்ணைத் தொழிலில் ஆர்வமாகவே இருந்தேன். அந்த ஆர்வம்தான் கோழிப்பண்ணை உருவாக காரணமாக இருந்தது. முதலில் 3000 கைராளி கோழிகளை வாங்கி வந்துவளர்க்கத் துவங்கினேன். அதில் எனக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது. ஒரு தொழில் துவங்குவதற்கு அதைப்பற்றிய அக்கறை மட்டும் இருந்தால் போதாது. அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்கிற புரிதலும் அவசியம் என்பதை உணர்ந்தேன். அருகில் உள்ள கிராமங்களில் பல காலமாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அனுபவசாலிகளிடம் கோழி வளர்ப்பு பற்றி கேட்டும், பார்த்தும் பாடம் கற்றுக்கொண்டேன். பின்னர் முறையாக கோழி வளர்ப்பில் இறங்கினேன்’’ என அசத்தலாக பேசத்துவங்கினார் விஷ்ணுராஜ். ஆத்தூரைச் சேர்ந்த இன்ஜினியரான இவர் தற்போது கோழிப்பண்ணை மூலம் லட்சத்தில் லாபம் பார்க்கிறார். ஒரு மாலைப்பொழுதில் அவரைச் சந்தித்தபோது பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இப்போது 4800 சதுர அடி நிலத்தில் கோழிகள் வளர்க்கிறேன். இதற்கான கொட்டகையை 24 க்கு 60 என்ற அளவில் அமைத்திருக்கிறேன். இதனை 5 பகுதிகளாக பிரித்து, ஜோடிக்கோழிகள், ஒரு நாள் கோழிக்குஞ்சுகள், ஒரு வாரக் கோழிக்குஞ்சுகள், வளர்ந்த கோழிகள் என தனித்தனியே வளர்க்கிறேன். இப்போது சோனாலி, பெருவிடை என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இங்குள்ளன. இவற்றின் மூலம் மாதத்திற்கு கிட்டதட்ட 7000 கோழிக்குஞ்சுகள் கிடைக்கின்றன. கோழிகளைப் பொருத்தவரையில் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. காலநிலையைப் பொருத்து உணவு கொடுப்பது, தண்ணீர் வைப்பது, உரிய நேரத்தில் மேய்ச்சலில் விடுவது போன்றவற்றை கவனிக்க வேண்டும். காலையில் 6 மணிக்கு கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்து விடுவோம். அதன் பிறகு 11 மணியளவில் கம்பு, ராகி, சோளம், கோதுமை, அரிசி கொடுப்போம். மதிய நேரத்தில் ஆடாதொடா, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, அழுகிய தக்காளி போன்றவற்றைக் கொடுப்பேன். மாலையில் அடைய வரும் கோழிகள் சரியான அளவில் தீவனம் உட்கொண்டனவா? என்பதைக் கவனித்துக் கொள்வேன். அதேபோல் காலையில் கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்ட பின்பு கொட்டகையை சுத்தம் செய்துவிடுவேன்.
பண்ணையைச் சுற்றிலும் இயற்கை முறையில் விளைந்த மூலிகைச் செடிகள் இருப்பதால் கோழிகளுக்கு நல்ல ஆரோக்கியமான சூழல் கிடைக்கிறது. காலை, மாலை என இருவேளையும் சுத்தம் செய்த கிண்ணத்தில் கோழிகளுக்கு தண்ணீர் வைப்பேன். அப்போது அதில் நாளொன்றுக்கு மஞ்சள், கீழாநெல்லி, குப்பைமேனித்தழை. வெற்றிலை, கற்பூரவள்ளி, வேப்பங்கொழுந்து போன்றவற்றை அரைத்து தண்ணீரோடு கலந்து வைப்பேன். இதனால் கோழிகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இதுபோக வாரம் ஒருமுறை கோழிகளுக்கு வெள்ளை சாதத்தில் வேப்பஎண்ணெய் கலந்து கொடுப்பேன். இவ்வாறு கொடுக்கும்போது கோழிகளின் இரைப்பை சுத்தம் ஆகும். மழைக்காலத்தில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுக்க நன்கு ஆற வைத்த சுடுதண்ணீர் கொடுப்போம். மாதம் ஒருமுறை 10 மில்லி ஈ.எம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுப்போம். இந்த மருந்து கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் குஞ்சு பொரித்த 7வது நாளில் எப்ஒன் மருந்தை கண்களிலும், மூக்கிலும் போடுவோம். 14வது நாளில் ஐபீடி என்ற மருந்தை அதேமாதிரி போடுவோம். 21வது நாளில் லசோட்டா என்ற மருந்தைத் தண்ணீரில் கலந்து கொடுப்போம். இது அம்மை நோய் வராமல் தடுக்கும். ஆறாவது மாதத்தில் கோழிகள் முட்டை வைக்கத் துவங்கிவிடும். கோழிகளின் முட்டைகளை இன்குபெட்டரில் அடை வைத்த 21வது நாளில் குஞ்சுகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் இருக்கும் பகுதியில் மீன்வலையை 6 அடி உயரத்திற்கு கட்டி வைப்போம். இதனால் கோழிகளை பருந்து, காகம், கழுகு போன்றவை இரைக்காக தூக்க முடியாது. பிறகு ஒருவாரம் கோழிகுஞ்சுகள், ஒரு மாத கோழி குஞ்சுகள் என்று விற்பனை செய்துவிடுவேன்.
ஒரு மாத பெருவிடை கோழிக்குஞ்சுகள் தரத்தை பொறுத்து ரூ.150 வரை விற்பனையாகும். ஒருநாள் சோனாலி கோழிகளை ரூ.35க்கு விற்பனை செய்கிறேன். ஒரு மாத சோனாலி கோழிகள் ரூ.80க்கு விற்பனை செய்வேன். கோழிப்பண்ணை துவங்கிய சிறிது காலம் வரை முட்டைகளை விற்பனை செய்து வந்தேன். ஆனால் எனக்கு அதில் பெரிய லாபம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தற்போது கோழிக்குஞ்சுகளாக விற்பனை செய்து வருகிறேன். சராசரியாக மாதம் 7000 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்கிறேன். இதில் பெருவிடைக் கோழியில் இருந்து 1000 கோழிக்குஞ்சுகளை மாதம் ஒருமுறை விற்பனை செய்கிறேன். ஒரு மாத கோழிக்குஞ்சுகள் மூலம் மாதம் ரூ.90,000 கிடைக்கிறது. ஒருநாள் கோழிக்குஞ்சுகள் மூலம் ரூ.20,000 கிடைக்கிறது. கடந்த மாதம் ஒருநாள் கோழிக்குஞ்சுகளாக விற்பனை செய்ததில் ரூ1.75 லட்சம் வருமானம் கிடைத்தது. சோனாலி, பெருவிடைக் கோழியில் தீவன செலவு, மருந்து செலவு ரூ.1.40 லட்சம் போக ரூ.1.55 லட்சம் லாபமாக கிடைக்கிறது. இதுபோக கோழிகளை இறைச்சிக்காகவும் விற்பனை செய்கிறேன். இதில் வாரம் 30 கிலோ வரை கோழிகள் விற்பனை ஆகிறது. இதன்மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
விஷ்ணுராஜ்: 91505 72321.
The post நாட்டுக்கோழிகளால் லட்சங்களில் லாபம் பார்க்கும் இன்ஜினியர்! appeared first on Dinakaran.