![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/30/36590969-varun.webp)
ராஜ்கோட்,
ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அணி தோல்வியை தழுவி இருந்தாலும் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டி முடிந்து வருண் சக்ரவர்த்தி அளித்த பேட்டியில், "இந்த போட்டியை நாங்கள் வெல்லாதது சோகம். ஆனால் இதுதான் கிரிக்கெட்டின் இயற்கை. இங்கிருந்து நகர்ந்து அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். நாட்டுக்காக விளையாடும்போது நீங்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை என்னால் தொடர்ச்சியாக செய்ய முடிகிறது. ஒரு ஓவர் ஸ்பெல் மட்டும் வீசுவதற்கு நான் புகார் சொல்ல மாட்டேன்.
ஏனெனில் பலமுறை நான் 4 ஓவர்களை கூட ஒன்றாக வீசியுள்ளேன். எனவே எனக்கு கொடுக்கப்படும் வேலையை நாட்டுக்காக செய்வதற்கு தயாராக உள்ளேன். என்னை பொறுத்தவரை, என்னால் என்ன செய்ய முடியும், அணிக்காக எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும் என்பதில் கவனம் செலுத்துவது மட்டுமே எனது பணி" என்று கூறினார்.