நாம் மறந்த பல்வேறு பாரம் பரிய பொருட்களில் பல்வேறு வகைகளை மீண்டும் தேடி எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கொண்டாட வேண்டிய விஷயங்களில் ஒன்றுதான் பாரம் பரியமான நாட்டு மருந்து கடைகள். நமது முன்னோர்கள் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு முதலில் நாடியது நாட்டு மருந்து கடைகளையே என்கிறார் நாட்டு மருந்துத் துறையை கையில் எடுத்திருக்கும் புதுமைப் பெண் மேனகா சந்திரசேகர். முதலில் எனது தொழிலுக்கான ஆர்வம் மோட்டிவேஷன் எல்லாமே என்னோட மாமனார் தான். பிசினஸை நான் எடுத்து பண்றேன்னு சொல்லும் போது என்னோட கணவரோட சப்போர்ட்டும் இதில் அதிகம் இருந்தது. எனக்கு நாட்டு மருந்து பற்றி நிறைய தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. இப்படியான மாரல் சப்போர்ட் கிடைக்கும் போது, தொழிலில் வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கை நிறைய வந்து விட்டது என்கிறார் நாட்டு மருந்து தொழிலில் அசத்தி வரும் மேனகா சந்திரசேகர். தற்போது சென்னை நொளம்பூர் பகுதியில் வசிக்கும் மேனகாவின் கணவரின் ஊர் தஞ்சாவூர். இரு இடங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளை வைத்து விற்பனையில் அசத்திவருகிறார். தற்போது மாங்காய் தொக்கு, தக்காளி ஊறுகாய், மசாலா பொடிகள் என தனது தொழிலை விரிவு படுத்தி உள்ளார் மேனகா. இவரது ஆவாரம்பூ குடிநீர், மூலிகைக் குடிநீர் இரண்டும் மிக சிறந்த ஒன்று. இவரது சிக்னேச்சர் தயாரிப்பு மூலிகைத் தாம்பூலம் என்கிறார் மேனகா. முந்திரி பாதம் மற்றும் செக்கு எண்ணெய் போன்றவற்றையும் ரீசெல்லிங் முறையில் விற்பனை செய்து வருகிறார்.
உங்கள் தொழில் ஆர்வம் குறித்து…
இது எங்களது குடும்பத்தொழில் என்பதால் 45 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டு மருந்து தயாரித்த அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. என்னோட மாமனார் அவங்களோட அப்பா அப்படின்னு எல்லாருமே நாட்டு மருந்து தான் தலைமுறை தலைமுறையா செய்து வருகிறார்கள். இப்போது நாங்களும் திருப்தி ஹாஷ்டேக் பெயரில் புதிய பிராண்ட் ஒன்றை உருவாக்கி புதுமையான முறையில் வெப்சைட் மற்றும் கடை இரண்டையும் நிர்வகித்துக்கொண்டு வருகிறோம். இந்த மூன்று வருடங்களில் இரண்டு கிளைகள் துவங்கி இணைய தளத்திலும் வெற்றிக்கரமாக நடத்திவருகிறோம்.
என்னென்ன புதிய பொருட்களை தற்போது தயாரித்து வருகிறீர்கள்?
எங்களோட சொந்த தயாரிப்பாக பல வகையான பொருட்களை தயாரிக்கிறோம். எங்களிடம் 80 க்கும் மேலான பொருட்கள் கிடைக்கும். மூலிகை குடிநீர் (தாகசாந்தி) ,மூலிகை தாம்பூலம் பீடா, கோல்டன் பேஸ் பேக், மூலிகை ஆயில் ,நலங்கு மாவு , நலங்கு மாவு சோப்பு, குல்கந்து ,ரோஸ் வாட்டர் சுகர் டீ, ஃபேஸ் ஆயில், சளி இருமல் சூரணம், வாஸ்து தூபம் பவுடர் , ட்ரடிஷனல் ஹேர் மாஸ்க் என தயாரித்து விற்பனை செய்கிறோம்.
ஸ்பெஷல் மூலிகைக் குடிநீர் குறித்து சொல்லுங்கள்?
மூலிகைக் குடிநீர்தான் திருப்தி ஹேஸ்டாக் ஆரம்பித்து முதலில் கொண்டு வந்த தயாரிப்பு. இதன் சிறப்பு அம்சம் நம்மளுடைய பாரம்பரிய மூலிகைகளான சுக்கு ஏலக்காய், கிராம்பு, சீரகம், நன்னாரி, மல்லி இன்னும் பல பொருட்களை சேர்ந்துதான் இதை தயாரிச்சிருக்கோம். இது தஞ்சாவூர்ல இயங்கிட்டு வர ஒரு ஹோட்டலுக்கு ரெகுலரா சப்ளை பண்றோம். அங்க வர எல்லாருக்குமே இந்த மூலிகைக் குடிநீர்தான் அங்கு குடிக்கிறதுக்கு கொடுக்குறாங்க. அவங்க விறகு அடுப்புல பாரம்பரிய முறைப்படி சமைக்கிற ஒரு பாரம்பரிய உணவகம். உணவகத்திற்கு வரும் கஸ்டமர்களுக்கு மூலிகை குடிநீர் பாக்கெட்டுகளை விற்பனைக்கும் வைத்துள்ளார்கள். தஞ்சாவூரில் இந்த மூலிகைக் குடிநீர் நிறைய வரவேற்பினை பெற்றுள்ளது. அதே போல் மூலிகை பீடாவும் எங்களது மிக சிறந்த தயாரிப்பு.
தற்போது மூலிகைப் பொருட்களுக்கான வரவேற்பு மக்களிடையே எவ்வாறு இருக்கிறது?
மக்களிடையே இப்போ மூலிகை பொருட்களுக்கான நம்பிக்கை அதிகமாக இருக்கு அப்படின்னு தான் சொல்லணும். பாரம்பரியத்தையும் நம்மளோட பழைய பயன்பாட்டு முறையையும் தேடி போயிட்டு இருக்கோம். அதனால நாட்டு மருந்து அல்லது மூலிகைப் பொருட்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்களை தேடி மக்கள் வர ஆரம்பிச்சு இருக்காங்க. இது ஒரு நல்ல மாற்றம். நமக்கு முதலில் மூலிகை மருந்துகள் குறித்த புரிதல்கள் வேண்டும் இதன் பயன்பாடு எதிர்காலத்தில் அதிகமாகும் என்று தோன்றுகிறது. கொரோனாவிற்கு பிறகு நிறைய மக்கள் நாட்டுமருந்து பொருட்களை தேடி வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் இதில் நிறைய முன்னேற்றம் மற்றும், விழிப்புணர்வு வரணும் அப்படின்றது தான் என்னோட ஆசை. அதேபோல் நிறைய நாட்டு மருந்து கடைகளை திறக்கணும் என்பதும் எனது கனவு என்கிறார் மேனகா சந்திரசேகர்.இதற்காக பல்வேறு விருதுகளும் பாராட்டுதல்களும் பெற்றுள்ளார். எதிர்கால திட்டமாக மசாலா பொருட்கள் தயாரிப்பிலும் இறங்க இருக்கிறார். மேனகா சந்திரசேகர் சிறந்த பெண் தொழில் முனைவோராக ஆகவேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.
விருதுகள் மற்றும் பாராட்டுகள்
சிறந்த தொழில் முனைவோருக்கான ஸ்டார் விருது, சிறகுகள் அமைப்பு வழங்கிய பெண் தொழில்முனைவோர்கள் விருது, அப்துல் கலாம் டிரஸ்ட் வழங்கிய சாதனைப் பெண்கள் விருதுகள் என தனது சிறந்த தயாரிப்புகளுக்கான பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறார் மேனகா.
உங்கள் குடும்பம் குறித்து..
முதலில் பிசினஸை நான் எடுத்து பண்றேன்னு சொல்லும்போது என்னோட கணவரின் முழுமையான ஒத்துழைப்பும் எனது இரு மகன்களோட ஒத்துழைப்பும் அதிகமாகவே இருக்கு. எனக்கு நாட்டு மருந்து பற்றி நிறைய தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது . இன்னமும் இது குறித்து நிறைய தெரிந்து கொள்கிறேன். இப்படி நிறையசப்போர்ட் கிடைக்கும் போது தொழிலில் வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கை மேலும் அதிகமாக வந்து விட்டது. அடுத்த கட்டமாக மசாலா பொருட்களை தயாரிக்க ஆயத்தங்களை செய்து வருகிறோம். அதிலுமே எங்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்கிற பெரும் நம்பிக்கைகள் இருக்கிறது. பெண்கள் எதிலும் துணிந்து இறங்கினால் வெற்றி நம் வசமே என்கிறார் மேனகா சந்திரசேகர்.
– தனுஜா ஜெயராமன்
The post நாட்டு மருந்து தொழிலில் கலக்கி வரும் பெண் தொழில்முனைவோர் மேனகா சந்திரசேகர்! appeared first on Dinakaran.