
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணியளவில் திருவனந்தபுரம் வந்தார். தனி விமானம் மூலம் வந்த அவர் இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 11 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்காக காலை காரில் விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்ஞம் செல்கிறார். விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சார்பானந்த சோனாவால் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
விழாவை முன்னிட்டு எம்எஸ்சி நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பலான செலஸ்டீனோ மரெஸ்கா விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்தது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்ஞத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன