
சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ளது தந்தீஸ்வரர் கோவில். இக்கோவிலின் சிவபெருமான், 'ஆவுடை நாயகி என்று அழைக்கப்படும் அம்பாளோடு காட்சி தருகிறார்.
இந்தக் கோவில் கி.பி. 950-ம் ஆண்டுக்கு முந்தைய ஒரு வளமான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஆதானி சோழன் என்ற சோழ மன்னன் இந்தக் கோலிலைக் கட்டியதாக நம்பப்படுகிறது. பின் இது மூன்றாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் இதன் பண்டைய தோற்றத்தைக் குறிக்கின்றன. பழங்காலத்தில் ஆதானி சோழனுடன் இருந்த தொடர்பு காரணமாகவே இப்பகுதி 'ஆதனிப்பாக்கம்' என்று அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில், இது மருவி இன்றைய 'ஆதம்பாக்கம்' ஆக உருவெடுத்தது.
ஒரு காலத்தில் பிருங்கி முனிவர் அருகில் உள்ள மலைகளில் சிவபெருமானை வழிபட்டு, தீவிர தவம் இயற்றி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவருக்கு நந்தி (காளை) வடிவத்தில் தரிசனம் தந்தார். எனவே, இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் 'நந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். பிருங்கி முனிவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த மலை 'பிருங்கி மலை' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
கோவிலுக்கு இரண்டு நுழைவு வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கிலும் மற்றொன்று தெற்கிலும் உள்ளது. தெற்கு நுழைவு வாசலுக்கு வெளியே ஒரு குளம் குளம் அமைந்துள்ளது. திருக்கோவிலின் பிரதான தெய்வமான நந்தீஸ்வரர் கருவறைக்குள் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கருவறையைச் சுற்றி நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் சிலைகள் உள்ளன. அம்பாள் ஆவுடை நயகியின் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. மேலும் கோவில் வளாகத்திற்குள் அம்பாளுக்கு ஒரு தனிச் சன்னிதி உள்ளது.
சுந்தர விநாயகர், நாகர்கள், சுப்ரமணியர் மற்றும் அவரது துணைவிகளான வள்ளி மற்றும் தேவசேனா, நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர், விநாயகர், சூரியன் மற்றும் பைரவர் ஆகியோர் உள்ளனர். கோவிலின் தூண்களை அலங்கரிக்கும் அழகிய சிற்பங்கள் பல்வேறு தெய்வங்களையும் புராணக் காட்சிகளையும் சித்தரிக்கின்றன. கோவிலின் சுவர்களில் கோவிலில் வரலாறு மற்றும் திருப்பாவை ஆகியவை எழுதப்பட்டுள்ளன. ஆலயத்தின் தலவிருடசமாக வில்வ மரம் நிகழ்கிறது.
திருமண தடை அகலும்
திருமணத் தடைகளை எதிர்கொள்பவர்கள், ஐந்து பிரதோஷ நாட்கள் இந்த கோவிலுக்கு வந்து இரண்டு ரோஜா மலர் மாலைகளை இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபடுகிறார்கள். இதனால் திருமணத் தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடும் என்று நம்பப்படுகிறது.
இத்திருக்கோவிலில் பிரதோஷம், சிவராத்திரி, சோம வாரம் (திங்கட்கிழமைகள்) உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆருத்ரா தரிசனம் இக்கோவிலில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். விநாயகர் மற்றும் சுப்ரமணியருடன் தொடர்புடைய முக்கிய நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
அமைவிடம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதம்பாக்கத்திற்கு மாநகரப் பேருந்துகள் உண்டு.