கூடலூர்,ஏப்.26: கூடலூரை அடுத்த நாடுகானியில் உள்ள தாவர மரபியல் பூங்காவில் வனத்துறை முன்கள ஊழியர்கள் பணியாளர்களுக்கான வனவிலங்கு- மனித மோதல் தடுப்பு மற்றும் குறைத்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில்கூடலூர் கோட்டவன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி வனவிலங்கு உயிரியல் துறை பேராசிரியர் மற்றும் ஆசிய யானைகள் ஆராய்ச்சியாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில்,காடுகளில் யானைகளின் முக்கியத்துவம் குறித்தும், யானைகளால் வனங்களில் வாழும் விலங்குகள் பறவைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், யானைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், யானைகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், யானைகளின் வாழ்விடங்கள் அவற்றிற்கான உணவு தண்ணீர் கிடைக்கும் பகுதிகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களில் வனவிலங்குகள் தாக்கி ஏற்படும் மனித உயிர் இழப்பு எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 10 வரை இருந்துள்ளது. அரசும் வனத்துறையும் இணைந்து எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த வருடம் 5 ஆக குறைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றின் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளதால் மோதல்கள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இதனை தேவையான இடங்களுக்கு மேலும் விரிவு படுத்துவதன் மூலம் மனித உயிர்களின் பாதிப்புகளை வெகுவாக குறைக்க முடியும் என கூடலூர் கோட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சரக வனச்சரகர்கள், வானவர்கள் கலந்து கொண்டனர்.
The post நாடு காணி தாவர மரபியல் பூங்காவில் வனவிலங்கு- மனித மோதல் குறைப்பு குறித்த பயிற்சி முகாம் appeared first on Dinakaran.