புதுடெல்லி: கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய புகாரின் அடிப்படையில் 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்களில் பஞ்சாபை சேர்ந்த 30 பேரும், அரியானா மற்றும் குஜராத்தை சேர்ந்த தலா 33 பேரும், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த தலா 3 பேரும், சண்டிகரை சேர்ந்த 2 பேரும் அடங்குவர். இவ்விவகாரத்தில் இந்தியாவிற்கு நாடு கட்டத்தப்பட்டவர்களை அமெரிக்க ராணுவம் நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த விசயம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. பஞ்சாப் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) கவுரவ் யாதவ் பிறப்பித்த உத்தரவில், ‘என்ஆர்ஐ விவகாரங்களின் கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பிரவீன் சின்ஹா தலைமையில் நான்கு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தற்போது நாடு கடத்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த கும்பல் குறித்து விசாரணை நடத்தும்.
அவர்கள் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் மூன்று இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், கர்னல் மாவட்டத்தில் நான்கு முகவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேபோல் அரியானா காவல்துறை மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது’ என்றார்.
The post நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து எஸ்ஐடி விசாரணை appeared first on Dinakaran.