வாழ்வில் ஜெயம் பெற ஸ்ரீ ஜெயதீர்த்தர்

6 hours ago 2

பகுதி 1

“ஸ்ரீ ஜெய தீர்த்தரை’’ பற்றி அறிய ஆவலாக உள்ளதாகவும், எப்போது அந்த கட்டுரை வெளிவரும் என்றும் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். இதோ.. நீங்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த, “மஹான் ஸ்ரீ ஜெய தீர்த்தரின்’’ அற்புதமான அறியப்படாத தகவல்கள். அவரைப் பற்றி எழுத வேண்டும் என்றவுடன், எண்ணற்ற பல தரவுகளை படிக்க வேண்டியிருந்தது. படிக்க படிக்க “ஹாஹா.. இத்தனை அற்புதங்களை ஜெயதீர்த்தர் செய்திருக்கிறாரா! என்று ஆச்சரியப்பட்டேன்.இந்த அத்தனை அற்புதங்களையும் ஒன்றுவிடாமல் நம் வாசகர்களுக்கு தர வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால், பகுதி – 1, 2 என பிரித்துள்ளோம். வாருங்கள் பகுதி ஒன்றில்…

பல நூல்கள்

ஸ்ரீ ஜெயதீர்த்தர், மத்வ மகான்களிலேயே மிக முக்கிய மகானாவார். மேலும், மத்வ தத்துவத்தின் தூண்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் பரம்பரையில் வந்த 6-வது யதிகளாவர் (சந்நியாசி)
பூர்வாஷ்ரம விவரங்கள்: (சந்நியாசி எடுத்துக் கொள்ளும் முன்பு வரை)

* காலம்: 1365 – 1388.
* பூர்வாஷ்ரம பெயர்: ஸ்ரீ ரகுநாத நாயகர்.
* ஆஷ்ரமம் குரு: ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர்.
* ஆஷ்ரமம் சீடர்: ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர்.

துவைத சித்தாந்தத்தில், ஸ்ரீஜெயதீர்த்தரின் பெயர் எப்போதும் அவரது பங்களிப்புகளுக்காக நினைவுகூரப் பட வேண்டும். பலரும் ஆராதனை போன்ற நிகழ்வின் போது நினைவுக் கூர்ந்து வருவது
மகிழ்ச்சியே!

1. “தத்வப்ரகாஷிகா’’ – பிரஹ்மஸூத்ர பாஷ்ய டீகா.
2. “ஸ்ரீமன்னியாயசுதா’’ – அனுவியாக்யானா டீகா.
3. “நியாயவிவரன டீகா’’
4. “பிரமேய தீபிகா’’ – கீதாபாஷ்ய டீகா
5. “நியாய தீபிகா’’ – கீதாதாத்பர்ய டீகா

6. “ஈஷாவாஸ்யோபநிஷத்பாஷ்ய டீகா’’
7. “ஷட் பிரஷ்ணோபநிஷத் பாஷ்ய டீகா’’
8. “தத்வஸங்க்யான டீகா’’
9. “தத்வவிவேக டீகா’’
10. “தத்வோத்யோத டீகா’’

11. “மாயாவாடா கந்தனா டீகா’’
12. “உபாதி கந்தனா டீகா’’
13. “பிரபஞ்சமித்யாத்வானுமான கந்தன டீகா’’
14. “கர்மநிர்ணய டீகா’’
15. “கதா லக்ஷண டீகா’’

16. “பிரமன லக்ஷண டீகா’’
17. “விஷ்ணுதத்வ நிர்ணய டீகா’’
18. “ருக்பாஷ்ய டீகா’’
19. “வாதவாளி’’
20. “பிராமண பந்தந்தி’’
21. “பத்யமாலா’’

ஆகிய சுமார் 21 படைப்புகளை ஜெயதீர்த்தர் இயற்றியிருக்கிறார். அதில், மத்வருடைய படைப்புகள் பற்றிய வர்ணனைகள் ஏராளம். அதே போல், அத்வைதத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் பல சுயதீன ஆய்வுகள் உட்பட பலவற்றையும் எழுதியிருக்கின்றார். ஸ்ரீ ஜெயதீர்த்தர் எழுதும் `டீக்கா’ (டீக்கா என்பது மத்வர் எழுதிய கிரந்தங்களுக்கு உரை எழுதுவது) போன்ற வேதாந்த நூல்களில் அவரது தனித்துவமான எழுத்திற்கும், பல இடங்களிலும் வாதாடி மத்வ தத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும், இவரை போன்று வேறாரும் இல்லை.

யாரையும் ஒப்பிடவும் முடியாது. மேலும், ஸ்ரீ ஜெயதீர்த்தருக்குப் பிறகு வந்த அனைத்து மகான்களுமே, இவருடைய கிரந்தங்கள், டீக்காக்கள், வியாகியாக்களை அடிப்படையாகக் கொண்டே பின்தொடர்ந்தும், எழுதியும் வந்திருக்கின்றார்கள். அதனாலேயே இவர் மிக முக்கிய மகானாவார்.

மேலே கூறியதை போல், இவருடைய “டீக்காக்கள்” அற்புதமாகவும், இவர் வழிவந்த மஹான்கள் இவருடைய “டீக்காக் களை” பின்தொடர்வதாலும், ஸ்ரீ ஜெயதீர்த்தருக்கு “டீகாச்சாரியார்” என்னும் பெயரும் ஏற்பட்டது. இன்றும் பக்தர்கள், “டீகாராயரு’’ என்றே அன்போடு அழைப்பதை பார்க்க முடிகிறது.

தினமும் கேட்கும் காளை மத்வாச்சாரியார், தன் சிஷ்யர்களுக்கு கிரந்தபாடங்களை கற்பிக்கும்போது, சரியாக தினமும் ஒரு காளை, அவரின் வீட்டருகே வந்து நின்றுக் கொண்டு மத்வர் உபதேசிக்கும் கிரந்தங்களை ஆனந்தமாக தலையசைத்து ஆரமார உற்சாகத்துடன் தினமும் கேட்டுவந்தது. சில சமயங்களில், வீட்டிற்குள் வந்து, மத்வரின் அருகே அமர்ந்து, மத்வர் சொல்லும் வேத பதங்களுக்கு ஏற்ப தலையினை அசைத்து, அதன் கழுத்தில் கட்டியிருக்கும் மணியானது ரீங்கார ஓசையினை எழுப்பும்.

சர்ச்சை எழுந்தது இப்படி இருக்க, திடீர் என்று ஒரு நாள், தன் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது, ​​“பிரம்ம சூத்ர பாஷ்யம்’’ (பிரம்ம சூத்திரங்கள் பற்றிய விளக்கம்), “கீதா பாஷ்ய” (பகவத் கீதையின் வர்ணனை), “உபநிஷத் பாஷ்யங்கள்’’ (பல உபநிடதங்கள் பற்றிய வர்ணனைகள்), “மஹாபாரதம் தாத்பர்ய நிர்ணயம்’’ (மகாபாரதத்தின் பகுப்பாய்வு), “ரிக் பாஷ்ய’’ (ரிக் வேதத்தின் வர்ணனை), “விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம்’’ (விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய வர்ணனை) போன்ற மத்வரின் மகத்துவமான பொக்கிஷங்களை மக்களிடத்தில் ஜெயதீர்த்தருக்கு அடுத்து எந்த சீடர் பரப்புரையை மேற்கொள்வார், என்கின்ற சர்ச்சை எழுந்தது.

எனக்கு பின் காளைதான் எழுதும்

மத்வர், தங்களின் பெயர்களைதான் பரிந்துரைப்பார் என்று அனைத்து சீடர்களும் ஒருவரையொருவர் முகத்தை பார்த்து சிரித்து, தற்பெருமை கொண்டு ஆணவத்தின் உச்சிக்கே சென்றனர். இந்த அண்ட சராசரத்தை காத்தருளும் ஸ்ரீ மந் நாராயணன் ஆணைக்கு இணங்கியே, மத்வரின் ஒவ்வொரு அசைவும், செயலும் இருக்கும். மத்வர், ஒரு போதும் தன்னிச்சையாக செயல்பட்டதே இல்லை. இங்கும், பகவான் நாராயணனின் ஆணைக்கு இணங்க, தன் சீடர்களை பார்த்து கூறுகிறார்;
“வியாக்யாஸ்யத்யேஷ்ட கோராட்’’(Vyakyasyadyeshta Korat)- என்கிறார்.

அதாவது, அனுதினமும் நம் முன்னால் அமர்ந்து, நான் சொல்லும் வேதங்களை சிரத்தையுடன் கேட்டுவரும் இந்த காளைதான் தனது படைப்புகளுக்கு விளக்கம் எழுதியும், பாமர மக்களுக்கு பரப்புரைகளையும் செய்யும். என்று திட்டவட்டமாக ஆணையிட்டு, அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகிறார்.

இதனால், கடும் ஆத்திரம் கொண்ட சில சீடர்கள், “உன்னை ஒரு பாம்பு கடிக்கும். அதனால் நீ மாண்டுவிடுவாய்’’ என்று அந்த காளையை பார்த்து சபித்தனர். ஒரு பண்டிதன், அதுவும் வேதம் கற்ற பண்டிதன் சபித்தால், அது என்னவாக இருந்தாலும், அது நடந்தே தீரும். அது போலவே, காளையை பாம்பு கடித்தது. பாவம் காளை, துடிதுடித்து இறந்தது. ஆனால், இறப்பதற்கு முன்பாக, மத்வரிடமிருந்து முழு சர்வமூலத்தையும் நேரடியாகக் கேட்டரிந்த பின்னரே காளையானது மாண்டது.

இதன் பலனாகவும், மத்வரின் அனுகிரஹத்தினாலும், அந்த காளை மறுபிறப்பில், “மஹான் ஸ்ரீ ஜெயதீர்த்தராக’’ அவதரித்து, மத்வர் கூறியபடியே அவரின் அனைத்து கிரந்தங்களுக்கும் உரை எழுதி, பரப்புகிறார். ஹாஹா.. எத்தகைய ஒரு அருமையான, அற்புதமான மஹானை நமக்கு மத்வர் கொடுத்திருக்கிறார்!

யாரகோல் குகை(Yaragol Cave):

ஸ்ரீஜெயதீர்த்தர், “ஸ்ரீமன்யாயசுதாதி’’ என்னும் அறிய கிரந்தங்களை எழுதிய தலம், இது. ஒரு காலத்தில், இந்த குகையை, சங்க முனிவரின் தபோபூமியாக இருந்திருக்கிறது. ஜெயதீர்த்தர், இந்த யாரகோல் குகையின் ஒரு பகுதியில், தனிமையான இடத்தில் அமர்ந்து, மிகுந்த பொறுமையுடனும், அறிவுடனும், மத்வரின் பல கிரந்தங்களுக்கு வர்ணனைகள் எழுதி இருக்கிறார். இந்த புண்ணிய பூமியில்தான் அவருடைய பெரும்பாலான டீக்காக்கள் (ஆன்மிகம் சார்ந்த உரைகள்) பிறந்தன. மேலும், மகான்கள் ஸ்ரீராமச்சந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீவித்யாநிதி தீர்த்தரின் மூல பிருந்தாவனமும் யாரகோல் குகை அருகில் உள்ளது. இந்த யாரகோல் குகை, யாத்கிரி மாவட்டத்தில் உள்ள சித்தபுராவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஜெயதீர்த்தரை கண்டெடுத்த அக்ஷோப்யர்

ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், தனது சர்வக்ஞ பீடத்திற்கு (தனக்கு அடுத்த பீடாதிபதி) ஒரு சீடரை தேடிக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள், அவர் பீமராதி என்னும் நதிக் கரையில் சற்று களைப்பார அமர்ந்திருந்தார். தூரத்தில் ஒரு சிறுவன் குதிரையின் மீது ஏறி அமர்ந்தவாறு, மெதுவாக வந்துக் கொண்டிருந்தான். அதை பார்த்ததும் அக்ஷோப்ய தீர்த்தருக்கு மகிழ்ச்சியோ.. மகிழ்ச்சி. குதிரையில் வந்த சிறுவனுக்கு அதீத தண்ணீர் தாகம் எடுக்க, குதிரையை நிறுத்தி, அருகில் உள்ள அந்த பீமராதி நதியினில், தன் கைகளைப் பயன்படுத்தாமல், தண்ணீரை வாயினை வைத்தவாறே குடித்தான்.

இதைக் கண்ட அக்ஷோப்யர், அந்த சிறுவனின் அருகில் சென்று, சமஸ்கிருதத்தில், “கிம் பசு பூர்வதேஹே” என்று உரத்த குரலில் சொன்னார். அதாவது முந்தைய ஜென்மத்தில் நீங்கள் பசுவாக இருந்தீர்களா? என்று சொல்ல, இதைக் கேட்ட அந்த சிறுவன் திகைத்து நின்றான். தனது முந்தைய ஜென்மங்கள் அதாவது, ஸ்ரீமதாச்சாரியாரின் காலத்தில், ஒரு காளையாக ஜென்மம் எடுத்தது நினைவுக்கு வந்தது.

உடனே ஸ்ரீஅக்ஷோப்ய தீர்த்தரை வணங்கி, யதி ஆசிரமத்தை வேண்டினார் (சந்நியாசம்). அக்ஷோப்ய தீர்த்தருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. காரணம், இந்த சிறுவன், அக்ஷோப்ய தீர்த்தரின் பூர்வாஷ்ரம சகோதரரின் மகனாவார். இருந்தபோதிலும், பெரியவர்களின் அனுமதியைப் பெறுமாறு அந்த சிறுவனிடத்தில் கேட்டுக் கொண்டார்.

நாகம் சூழ்கிறது

தன் குருவான அக்ஷோப்ய தீர்த்தரின் பேச்சை தட்டாது, அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தெரிவித்து அனுமதிகோருகிறார். அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த சிறுவன், எவ்வளவோ எடுத்துரைத்தும் அதை கேட்காது, வலுக்கட்டாயமாக பீமாபாய் என்பவருக்கு திருமணம் முடிக்கிறார்கள். அந்த சிறுவனுக்கு முதல் இரவை பெரியோர்கள் ஏற்பாடு செய்தார்கள். பீமாபாய் தன் கணவனான அந்த சிறுவனின் அருகில் செல்கிறாள். மிக பெரிய ஐந்து தலை நாகம் ஒன்று வந்து, பீமாபாயை தொடவிடாமல், அந்த சிறுவனை பாதுகாக்கிறது. பயந்து கூச்சல் விடுகிறாள். அங்கு ஓடி வந்த சிலர் கதவுகளை திறந்து பார்க்கிறார்கள். அந்த சிறுவனை நாகம் சுற்றி இருப்பதை கண்டு விலகினர். சிறுவனின் தந்தையும் இதைக் கண்டு நடுங்கினார். தான் செய்த தவறை நினைத்து வருந்தினார்.

உடனடியாக, சிறுவனை அழைத்துக் கொண்டு அக்ஷோப்ய தீர்த்தரின் ஆசிரமத்திற்கு சென்று நடந்தவற்றைகூறி, மன்னிப்பை கேட்டார். சிறுவனின் தந்தையை மன்னித்த அக்ஷோப்ய தீர்த்தர், அந்த சிறுவனுக்கு “ஸ்ரீஜெயதீர்த்தர்’’ என்று திருநாமம் சூட்டி, திருவாய் மொழிந்து, அவருக்கு சந்நியாசத்தை வழங்கினார். ஜெயதீர்த்தர், தனது முப்பிறவியில் பசுவாக இருந்து மத்வரிடத்தில் பலவற்றை கற்றிருந்தாலும், “சுகவாணி’’ (நேரடியாக) போல, அக்ஷோப்ய தீர்த்தரிடம், மேலும் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார், மகான் ஜெயதீர்த்தர். அது போலவே நேரடியாக அக்ஷோப்ய தீர்த்தரிடத்தில் பாடங்களை கற்றார். பின்னொரு காலத்தில், தன் குருவான அக்ஷோப்ய தீர்த்தரை;

“அக்ஷோப்யதீர்த குருநா ஷுகவாக்ஷிச்சிதஸ்ய மீ’’
(“akshobhyatirtha guruNaa shukavakShischitasya mE”)
என்று, தனது கிரந்தங்களில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
மேலும், அவரது பெரும்பாலான கிரந்தங்களில் ஜெயதீர்த்தர், தனது குருவான அக்ஷோப்ய தீர்த்தரை புகழ்ந்துள்ளார்.

“பதவாக்ய ப்ரமாநாஞாந் ப்ரதிவாதிதாச்சித:
ஸ்ரீமடக்ஷோப்யாத்இர்தாக்யானுபதிஷ்டி குருஉன்மமா
பதவாக்ய பிரமாநாக்னான்ப்ரநாம்ய சிரசா குருஉன்
வ்யாகாரிஷ்யே யதாப்ஓதம் விஷ்ணுதத்வவிநிர்நயம்”
(padavaakya pramaaNaagnaan prativaadidachchida:
shrImadakShObhyatIrthaaKyaanupatiShTE gurUnmama
padavaakya pramaaNagnaanpraNamya shirasaa gurUn
vyaakariShyE yathaabOdhaM viShNutattvavinirNayaM)

குரு பக்தி, குரு விஸ்வாசத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு, ஸ்ரீ ஜெயதீர்த்த ஸ்வாமிகள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.

துர்கா பெட்டாவில் தவம்

தனது குருவான மகான் ஸ்ரீஅக்ஷோப்யதீர்த்தர் பிருந்தாவனம் பிரவேசத்திற்குப் பிறகு, “கிரந்த ரக்ஷனையைத்’’ (தான் எழுதும் கிரந்தங்கள்) தொடங்க முடிவு செய்தார். “கிரந்த ரக்ஷனை வேலையைத் தொடங்குவதற்கு முன், கர்நாடக மாநிலம், உடுப்பி அருகில் உள்ள துர்கா பெட்டா என்னும் மலைப் பகுதிக்கு சென்று தவமிருக்க ஆயத்தமானார். பச்சை இலைகள், காய்ந்த மொத்தங்கள், பஞ்சகவ்யம் முதலியவற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு, கடும் தவத்தை மேற்கொண்டார்.

ஸ்ரீ ஜெயதீர்த்தரின் தவத்தை மெச்சிய சரஸ்வதி மற்றும் பாரதிதேவியாரின் அனுகிரஹத்தைப் பெற்றார். மேலும், சேஷபகவானும் நேரில் காட்சிகொடுத்து, ஜெயதீர்த்தரின் நாக்கில் எழுதி அனுகிரஹம் செய்தார். அதனால்தான், ஸ்ரீ ஜெயதீர்த்தருக்குள்ளும் சேஷபகவானின் ஆவேசம் இருக்கிறது என்கிறார்கள், அவருக்கு பின்னால் வந்த மகான்கள்.(ஸ்ரீ ஜெயதீர்த்தரின் அனுகிரஹம், கோனேரி பிரணேஷா, முஸ்லீம் மன்னர் ஃபிரூஸ்ஷாதுக்ளக்விற்கு அனுகிரஹம் செய்தது ஆகியவை பகுதி – 2…)

ரா.ரெங்கராஜன்

The post வாழ்வில் ஜெயம் பெற ஸ்ரீ ஜெயதீர்த்தர் appeared first on Dinakaran.

Read Entire Article