டெல்லி : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதியது அல்ல என்று மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் நேற்று தாயகம் திரும்பினர்.நாடு கடத்தலின் போது அவர்களின் கை கால்களுக்கு விலங்கு போடப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்காவின் சட்டப்படியே நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் கை விலங்கு போடப்படவில்லை. இதற்கு முன் எப்படி செய்தார்களோ அதையே அமெரிக்க அதிகாரிகள் செய்துள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடுகடத்துவது புதியது அல்ல.
இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்,” இவ்வாறு தெரிவித்தார். நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போட்டதை நியாயப்படுத்துவதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர் சுர்ஜேவாலா வெளியிட்ட கண்டன பதிவில், “40 மணி நேரம் பயணம் செய்து வந்த விமானத்தில் ஒரே ஒரு கழிவறைதான் இருந்துள்ளது. இந்தியாவின் தன்மானத்தை காக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. சிறிய நாடான கொலம்பியா கூட குடிமக்களை அவமானமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார். இந்தியர்களை கைவிலங்கு போட்டு நாடு கடத்தப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதாக தகவல் தெரிந்த உடன் ஒன்றிய அரசு என்ன செய்தது?. இந்தியர்களை கவுரவமாக அழைத்து வர ஒரு விமானத்தை இந்தியா அனுப்புவதை யார் தடுத்தது?,”இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் மோடி இந்தியர்களுக்கு கைவிலங்கு போட அனுமதித்தது ஏன்? என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
The post நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா கைவிலங்கு போட்டதை நியாயப்படுத்தி ஒன்றிய அரசு விளக்கம் : காங்கிரஸ், திமுக கண்டனம் appeared first on Dinakaran.