வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் தீவிர தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இந்தியாவும் நேரடி தாக்குதலை தொடர்ந்ததால் உச்சகட்ட பதற்றம் உருவாகி உள்ளது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போரில் அமொிக்கா தலையிடாது என்று அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டும்தான் முடியும். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலில் நாம் தலையிட போவதில்லை. அது எங்கள் வேலை அல்ல. அரசியல் ரீதியாக பிரச்சனையை தீர்க்க முயற்சி மேற்கொள்வோம்.
இரு நாடுகளும் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது. இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் கையில்தான் உள்ளது. போரை கைவிட இருநாடுகளிடமும் நாங்கள் கூற முடியாது. இவ்வாறு ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது; அது எங்கள் வேலை அல்ல: ஜே.டி.வான்ஸ் உறுதி!! appeared first on Dinakaran.