நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்: டெல்லி – நொய்டா எல்லையில் பதற்றம்

2 months ago 8


நொய்டா: நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்குதல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் டெல்லி – நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேசம், தலைநகர் டெல்லி எல்லையில் அமைந்துள்ள நொய்டாவில் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பாக நொய்டா ஆணையம், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் – விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. யமுனா ஆணையத்தின் ஆடிட்டோரியத்தில் நடந்த இந்த கூட்டத்தில், இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் யமுனா அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அவர்கள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பாரதிய கிசான் பரிஷத் (பி.கே.பி) கிசான் மஸ்தூர் மோர்ச்சா (கே.எம்.எம்) போன்ற விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. பி.கே.பி தலைவர் சுக்பீர் கலீபா தலைமையிலான முதல் குழு, நொய்டாவின் மஹாமாயா மேம்பாலத்தின் கீழ் இருந்து பேரணியாக செல்ல முயன்றது. அதற்காக அப்பகுதியில் விவசாயிகள் ஒன்று கூடினர். இவர்கள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்வதை தடை செய்யும் நோக்கில், டெல்லி காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. டெல்லி-நொய்டா எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விவசாயிகளைத் தடுக்க எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. அந்த வழியாக வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு 7 நாள் கெடு விதித்தனர். 7 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லி நோக்கி பயணம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

The post நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்: டெல்லி – நொய்டா எல்லையில் பதற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article