
புதுடெல்லி,
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 2024 ஆகஸ்ட் 8ம் தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இத்தகைய சூழலில், நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது
காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில்,பாஜக தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்கிறது.மக்களவையில் தற்போதுள்ள 542 உறுப்பினர்களில் 293 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு மட்டும் 240 எம்.பிக்கள் உள்ளனர். மாநிலங்களவையில் பெருபான்மைக்கு 119 உறுப்பினர்கள் ஆதரவ் தேவையாகும்.
இதில் பாஜகவிற்கு மட்டும் 98 எம்பிக்கள் உள்ளனர். கூட்டணியையும் சேர்த்தால் 123 உறுப்பினர்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதால், எம்.பிக்கள் அனைவரும் தவறாது அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.