புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், வருமான வரிச்சலுகை, தொழில்துறையினருக்கு வரிக்குறைப்பு, பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்க தேவையான ஊக்குவிப்பு திட்டம் போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ கூட்டணி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். தனது 8வது பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என ஒவ்வோர் ஆண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கடந்த ஒன்றிய பட்ஜெட்களில் தனிநபர் வருமான வரி சலுகை உயர்த்துவதுபோல் தோன்றினாலும், ஒரு சில தரப்பினருக்கு மட்டுமே அது பலன் அளிக்கக் கூடியவகையில் உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பலர் சேமிக்க முடியாமல் தவிக்கின்றனர். 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலையான வரிக்கழிவுகளுடன் சேர்த்து கணக்கிட்டால் ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது. இருப்பினும், நிபந்தனைகளின்படி இந்தச் சலுகை சில தரப்பினருக்கு மட்டுமே பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது. புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை என இரண்டு வரி முறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், புதிய வரி முறைக்கு மாறுவோர், வீட்டுக்கடன் வட்டி, காப்பீடு பிரீமியம் மீதான வரிச்சலுகைகளைப் பெற முடியாது.
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய பட்ஜெட்டில், வருமான வரி உச்ச வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் ஈட்டுவோர் 25 சதவீத வரி செலுத்தும் வகையில் புதிய வரிப் பிரிவு சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அமலில் உள்ள தனிநபர் வருமான வரி வரம்பின்படி ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோர் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். எனவே, 25 சதவீதமாக குறைப்பது அவர்களுக்கு பலன் அளிக்கும். நீண்ட காலமாக வருமான வரி சலுகை அறிவிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் இந்த முறை சலுகை அறிவிப்பு வெளியாகும் என மக்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர்.
காப்பீடு பிரீமியம், வீட்டுக்கடன் வட்டிக்கான சலுகைகளை பெற வழி வகுக்கும் பழைய வரி முறையை முற்றிலுமாக ஒழித்து விட்டு, புதிய வரி முறையை அமல்படுத்த வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கேற்ப நிபந்தனைகளையும் விதித்தது. இதனால் சுமார் 72 சதவீதம் பேர் புதிய வரி முறைக்கு மாறி விட்டனர். இன்று வருமான வரி உச்சவரம்பு அறிவிப்பு வெளியானாலும், புதிய வரி முறைக்கு மக்கள் மாற நிர்பந்தம் செய்வது போன்ற நிபந்தனைகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல், 80 சி வரிச் சலுகையில் பெறப்படும் பலன் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை உயரும் எனவும், 80 டி பிரிவில் இன்சூரன்ஸ்பிரீமியம் மூலம் பெறப்படும் வரிச்சலுகை ரூ.25,000ல் இருந்து ரூ.50,000 ஆகவும், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமான வரம்பில் உள்ளவர்களுக்கு வரி குறைப்பு அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் டிவிடெண்ட் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அதன் மீது 15 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வரலாம் என்கின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக 5.4 சதவீதத்துக்கு சரிந்துள்ளது.
எனவே, வரிச்சலுகை அறிவித்தால்தான் மக்களிடம் நுகர்வும் உயர்ந்து, பொருளாதார ஏற்றத்துக்கு காரணமாக அமையும் என்கின்றனர் பொருளாாதார நிபுணர்கள். இதுபோல், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப உள் கட்டமைப்பை வலுப்படுத்தவும், உருவாக்கவும் ஏற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என தொழில்துறையினர் கோருகின்றனர். தொழில்துறையை பொறுத்தவரை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மிக முக்கியமானது. நாட்டின் உற்பத்தியில் 45 சதவீத பங்களிப்பை இவை வழங்குகின்றன. எனவே, இந்த பிரிவினருக்கு ஜிஎஸ்டி குறைப்பு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் போன்றவை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல், ரியல் எஸ்டேட் துறையும் மந்த நிலையில் காணப்படுகிறது. கட்டுமான பொருட்கள் விலை அதிகரிப்பால் செலவுகள் அதிகரித்து விட்டன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, சிமெண்டுக்கு 28 சதவீதமாக உள்ள வரி 18 சதவீதமாக ஆக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காலணிகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், சுங்க வரியை 38.5 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகவும் குறைக்கப்பட வேண்டும், பெருநிறுவனங்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக்கப்பட வேண்டும் என தொழில்துறையினர், நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
* புதிய வருமான வரி சட்டம்?
வருமான வரி சலுகைகள் ஒருபுறம் இருக்க, வருமான வரிச்சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது. வருமான வரிச்சட்டம் 1961க்கு பதிலாக நேரடி வரிகள் சட்டம் (டிடிசி) கொண்டுவரப்பட வாய்ப்புகள் உள்ளன என ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போதுள்ள வருமான வரிச் சட்டம் 23 அத்தியாயங்கள், 298 பிரிவுகள் கொண்டதாக உள்ளது. இதனை எளிதாக்கும் வகையிலும், காலத்துக்கு ஒவ்வாதவற்றை நீக்கி நேரடி வரிகள் சட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது என அவர் கூறினார்.
* நடுத்தர மக்களுக்கு சலுகை? பிரதமர் மோடி சூசகம்
நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘ஏழைகள், நடுத்தர மக்களுக்கு லட்சுமி தேவி ஆசி வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை இந்தியா நிறைவு செய்துள்ளது பெருமைக்குரியது. எனது மூன்றாவது அரசில், முதலாவதாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இது. 2047ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டை நிறைவு செய்யும்போது, வளர்ச்சி அடைந்த இந்தியாவாக இருக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. அதற்கு இந்த பட்ஜெட் புதிய ஆற்றலையும், நாட்டுக்கு நம்பிக்கையையும் வழங்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
The post நாடாளுமன்றத்தில் இன்று ஒன்றிய பட்ஜெட் தாக்கல்: வருமானவரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயருமா? appeared first on Dinakaran.