நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்; பாஜ – காங். எம்.பிக்கள் கைகலப்பு: கார்கே, ராகுலை தள்ளிவிட்டதாக புகார், 2 பாஜ எம்.பி.க்கள் காயம், ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு

4 weeks ago 4

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவை கண்டித்து நடந்த போராட்டத்தை தொடர்ந்து, அவைக்குள் காங்கிரஸ் எம்.பிக்கள் நுழைய முயன்றபோது, பாஜ எம்.பி.க்கள் தடுக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டது. இரு கட்சி எம்பிக்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை பாஜ எம்.பி.க்கள் தள்ளிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதே நேரத்தில், ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் தாங்கள் காயமடைந்ததாக கூறி பாஜ எம்பிக்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், அரசியலமைப்பின் 75ம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டை பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் மறுத்து, காங்கிரஸ் உண்மையை திரித்துக் கூறுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றம் நேற்று கூடுவதற்கு முன்பாக ராகுல், பிரியங்கா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் அமித்ஷாவை கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் துவார் எனப்படும் நாடாளுமன்ற நுழைவாயில் வரை பேரணி நடத்தினர். இதில் பல எதிர்க்கட்சி எம்பிக்களும் நீல நிற உடையில் பங்கேற்றனர். அதே சமயம், காங்கிரசை கண்டித்து பாஜ எம்பிக்கள் மகர் துவார் படிக்கட்டுகளில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

இதனால், பாஜ, காங்கிரஸ் எம்பிக்கள் நேருக்கு நேராக சந்தித்த நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் படிக்கட்டில் ஏறி கூட்டத்தொடரில் பங்கேற்க அவைக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களுக்கு வழிவிடாமல் பாஜ எம்பிக்கள் தடுத்ததால் இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு கட்சி எம்பிக்களும் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பாஜ எம்.பி.க்களால் தள்ளிவிடப்பட்டார்.

படிக்கட்டில் சாய்ந்த அவர் சுதாரித்து எழுந்தார். அதே நேரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்களை பாஜ எம்பிக்கள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் வரலாறு காணாத சம்பவங்கள் அரங்கேறின. சிறிது நேரத்தில், பாஜ எம்பி பிரதாப் சந்திர சாரங்கி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து மண்டை உடைந்ததாக ரத்த காயத்துடன் வீல்சேரில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ராகுல் காந்தி ஒரு எம்பியை தள்ளி விட்டார். அவர் என் மீது விழுந்ததால் நான் தவறி கீழே விழுந்து காயமடைந்தேன்’’ என்றார்.

பாஜ எம்பி நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியை அழைத்து, ‘‘உங்களுக்கு வெட்கமில்லையா? 69 வயது முதியவரை கீழே தள்ளி விட்டுள்ளீர்கள்’’ என கோபத்துடன் கத்தினார். இதனால் அங்கிருந்த பாஜ எம்பிக்கள் ராகுலுக்கு எதிராக கோஷமிட்டனர். இதே களேபரத்தில் மற்றொரு பாஜ எம்பி முகேஷ் ராஜ்புத்தும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இவ்விரு எம்பிக்களும் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்றம் மல்யுத்த வளையம் அல்ல, உடல் வலிமையை காட்டும் இடம் அல்ல’’ என்றார். இதற்கிடையே, பாஜ எம்பிக்களின் குற்றச்சாட்டை மறுத்த ராகுல் காந்தி, ‘‘படிக்கட்டில் ஏறி அவைக்கு செல்ல முயன்றேன். ஆனால் பாஜ எம்பிக்கள் என்னை தடுத்து நிறுத்தி சூழ்ந்து கொண்டு மிரட்டினர். அவர்கள்தான் என்னை தள்ளிவிட்டனர். நான் யாரையும் தள்ளிவிடவில்லை’’ என்றார். இதே போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘பாஜ எம்பிக்கள் எங்களை மூர்க்கத்தனமாக தள்ளி விட்டனர். இதில், அறுவைசிகிச்சை செய்த எனது காலில் காயம் ஏற்பட்டுள்ளது’’ என குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ராகுல் காந்திக்கு எதிராக பாஜ எம்பிக்கள் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும் புகார் அளித்தனர். இதே போல, பாஜ எம்பிக்களும் சபாநாயகரிடம் முறையிட்டனர். இதுதவிர, காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பாஜ எம்பிக்களுக்கு எதிராக புகார் அளித்தனர்.

பாஜ எம்பிகள் ஹேமங் ஜோஷி, அனுராக் தாக்கூர், பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் ராகுல்காந்தி மீது கொடுத்த புகார் அடிப்படையில் அவர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 117 (தன்னிச்சையாக கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 125 (உயிர் அல்லது பிறரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து), 131 (குற்றவியல் நடவடிக்கைக்காக சக்தியைப் பயன்படுத்துதல்), 351 (குற்றம் சார்ந்த மிரட்டல்), 3(5) (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாகாலாந்தைச் சேர்ந்த பாஜ பெண் எம்பி பாங்னான் கொன்யாக், போராட்டத்தின் போது ராகுல் காந்தி தனக்கு மிக அருகில் வந்து கத்தியதாகவும், அசவுகரியமாக உணரும் வகையில் செய்ததாகவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார். இதனால் நாடாளுமன்றமே போர்க்களமாக மாறிய நிலையில், காலையில் மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளும் கூடின.

இதில் கடுமையான அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், ஜெய்பீம் ஜெய்பீம் எனவும் கோஷமிட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே, அதானி லஞ்ச விவகாரம், அமித்ஷா சர்ச்சை பேச்சு என கூட்டத்தொடர் முழுவதும் முடங்கிய நிலையில், இறுதியாக ஆளும், எதிர்தரப்பு எம்பிக்களின் கைகலப்பு விவகாரம் அசாதாரண சூழலை ஏற்படுத்தி உள்ளது.

* உண்மையில் நடந்தது இதுதான் ராகுல் காந்தி, கார்கே விளக்கம்
தள்ளுமுள்ளு சம்பவத்தை தொடர்ந்து, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை நேற்று விளக்கினர். ராகுல் காந்தி கூறுகையில், ‘‘நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றேன். ஆனால் பாஜ எம்பிக்கள் என்னை தடுத்து நிறுத்தினர். என்னை தள்ளிவிட்டு மிரட்டினர். என்னை மட்டுமல்ல, மல்லிகார்ஜூன கார்கேவையும் அவர்கள் தள்ளிவிட்டனர். ஆனால் இதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.

நாடாளுமன்றத்திற்குள் நுழைய எங்களுக்கு உரிமை உள்ளது. அதை தடுக்க பாஜ எம்பிக்கள் முயன்றனர். பாஜ அரசிலயமைப்புக்கும் எதிரி, அம்பேத்கருக்கும் எதிரி என்ற உண்மையை நாங்கள் சொன்னது தான் பாஜ எம்பிக்களை கோபப்படுத்தி உள்ளது. இது அமித்ஷாவை காப்பாற்றும் முயற்சி’’ என்றார். மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘என்னையும் படியிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். நான் நிலைதடுமாறி படிக்கட்டில் அமர்ந்து கொண்டேன். இதில், எனது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அமித்ஷா கூறியதை நாங்கள் திரித்து கூறுவதாக சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. வேண்டுமென்றால் அதற்கான ஆதாரத்தை பாஜ காட்டட்டும்’’ என்றார்.

* யார் இவர்கள்?
நாடாளுமன்றத்தில் நடந்த களேபரத்தில் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டியதன் மூலம் பாஜ எம்பிக்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத், பாங்கோன் கொன்யாக் ஆகியோர் கவனம் பெற்றுள்ளனர். இதில் 69 வயதாகும் பி.சி.சாரங்கி ஒடிசாவில் உள்ள பாலசோர் தொகுதி எம்பி ஆவார்.

முகேஷ் ராஜ்புத் (55), உத்தரபிரதேசத்தில் உள்ள பரூகாபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்பியாக வெற்றி பெற்றவர். இவர், 2014ல் சிட்டிங் எம்பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தை தோற்கடித்தார். பாங்கோன் கொன்யாக், நாகலாந்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்பி ஆவார். மேலும், கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி, நாகலாந்தில் இருந்து மாநிலங்களவைக்கு தலைமை தாங்கும் முதல் எம்பி என்ற வரலாற்றையும் படைத்தார்.

* ராகுல் அப்படி செய்பவர் அல்ல
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ராகுல் காந்தியை நான் நன்கு அறிவேன். எம்பியாக இல்லாத ஒருவரைக் கூட ராகுல் கீழே தள்ளி விட மாட்டார். யாரிடமும் முரட்டுத்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்ளும் பழக்கம் இயற்கையிலேயே அவரிடம் கிடையாது’’ என கூறி உள்ளார்.

* ஐசியுவில் பாஜ எம்பிக்கள் மோடி நலம் விசாரித்தார்
நாடாளுமன்ற கைகலப்பில் தலையில் காயமடைந்ததாக கூறப்படும் பாஜ எம்பிக்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் இருவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு பாஜ தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

டாக்டர்கள் கூறுகையில், ‘‘சாரங்கிக்கு ரத்தம் மிகுதியாக வெளியேறி உள்ளது. அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தலையில் காயமடைந்து சுயநினைவை இழந்த முகேஷ் ராஜ்புத் சிகிச்சைக்கு பின் நினைவு திரும்பி விட்டார். அவருக்கும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது’’ என்றார்.

* அமித்ஷாவை காப்பாற்ற சதி நடக்கிறது
நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘மகர் துவார் நுழைவாயில் பகுதியில் இத்தனை நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். தினமும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடக்கிறது. இன்று (நேற்று) முதல் முறையாக பாஜ எம்பிக்கள் போராட்டம் நடத்தி அனைவரும் அவைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போது அமித்ஷாவை காப்பாற்ற சதியை தொடங்கி உள்ளனர்.

என் கண் எதிரே, கார்கேவை தள்ளிவிட்டு கீழே விழ வைத்தனர். அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது அவர்படும் வேதனையில் தெரிந்தது. அவருக்கு கால் உடைந்திருக்கும் என நினைத்தேன். ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக பொய்யை பரப்புகின்றனர். இது திட்டமிட்ட சதி. எங்களை தடுத்து நிறுத்துபவர்களுக்கு சவால் விடுகிறோம், ‘ஜெய் பீம்’ என சொல்லுங்கள் பார்க்கலாம். அவர்களால் ஏன் ஜெய் பீம் என சொல்ல முடியவில்லை?’’ என்றார்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்; பாஜ – காங். எம்.பிக்கள் கைகலப்பு: கார்கே, ராகுலை தள்ளிவிட்டதாக புகார், 2 பாஜ எம்.பி.க்கள் காயம், ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article