பச்சிளம் குழந்தைகள் மரணத்தை தடுப்பதில் தமிழகம் முன்னணி: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அளித்த பதிலில், ”இந்தியாவில் பிரசவ காலத்தில் தாய் இறப்பது தொடர்பான எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 83 சதவிகிதம் குறைந்திருக்கிறது. மேலும் பிரசவ காலத்தில் தாய் மரணிக்கும் நிகழ்வை குறைவாக வைத்திருக்கும் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. அதேபோல பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு இரண்டு என்ற அளவிலேயே இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையைப் பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது. என்று தெரிவித்தார்.
ஆறு வழிச்சாலை: மாநிலங்களைவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பேசியதில் ”தமிழ்நாட்டில் தர்மபுரியிலிருந்து நாமக்கல் வரையிலான 119.5 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை-44ஐ நான்கு வழிச்சாலையிலிருந்து ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
ஜவுளி பூங்கா: மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் வைத்த கோரிக்கையில், “பிரதம மந்திரி மித்ரா திட்டத்தின் கீழ் குடியாத்தம் பகுதியில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆடைப் பூங்காவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் எய்ம்ஸ்?: மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், “தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
யுஜிசி வரைவு விதிகள்: மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், ‘‘பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் முன்மொழிந்த வரைவு விதிமுறைகள், மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சியை குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன. இது கூட்டாட்சி கட்டமைப்புக்கு பெரிய சவாலை ஏற்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் மாநில கவர்னர்களுக்கு ஒருதலைப்பட்ச அதிகாரங்களை வழங்குவதன் மூலமும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை விதிக்க முயல்கின்றன. எனவே இந்த வரைவு விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.
The post நாடாளுமன்ற செய்திகள் appeared first on Dinakaran.