களக்காடு: நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க 3வது நாளாக கூண்டுகள் வைத்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். விளை நிலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி ஊருக்குள் கடந்த 27ம் தேதி கரடி புகுந்தது. சாலையில் உலா வந்த கரடியை அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து கரடி பதுங்கியுள்ள இடத்தை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து கரடியை பிடிப்பதற்காக 2 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. மேலும் கரடி உலா வந்த சாலையில் மீண்டும் கரடி நடமாடும் வாய்ப்பிருப்பதால் மறுகால்குறிச்சி செல்லும் சாலையை வனத்துறையினர் அடைத்தனர். இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்காக நாங்குநேரி வரும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றுப் பாதையில் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
இதேபோல் இங்குள்ள வயல்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நெல் பயிர் சாகுபடி தீவிரமாக நடந்து வருவதால் விவசாயிகள் தினமும் வயலுக்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் 3 நாட்களாக விவசாயிகள் வயலுக்கு செல்ல முடியாமலும், பணிகளை மேற்கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றனர். நேற்று 3வது நாளாக கரடியை பிடிக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் கரடி கூண்டுக்குள் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. கரடி சிக்காததால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இதையடுத்து இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்தாண்டும் இதேபோல மறுகால்குறிச்சி சாலையில் கரடி உலா வந்ததும், தொடர்ந்து வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி சிக்காமல் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
The post நாங்குநேரி அருகே 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை கூண்டில் சிக்காமல் ‘டிமிக்கி’ கொடுக்கும் கரடியால் பீதி: விளைநிலங்களுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.