நாகையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிப்பு

3 days ago 3

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தாக்கி பல லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர். நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த் (37). இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 1ம் தேதி காலை 8 மணிக்கு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து முரளி (38), சாமிநாதன் (30), வெற்றிவேல் (38), அன்பரசன் (36) ஆகிய 5 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு கிழக்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 2ம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்தபோது 2 பைபர் படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர் இரும்பு கம்பியால் தாக்கி அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள், 1 வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அதே போல் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் மீனவர் தெருவை சேர்ந்த சுமதிக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 2ம்தேதி அதிகாலை 2 மணிக்கு வெள்ளப்பள்ளம் கடற்கரையிலிருந்து சென்ற பிரவீன் (24), இவரது சகோதரர் பிரதீபன் (22), குட்டியாண்டி (40), விஷால் (21), நதீஷ் (21) ஆகிய 5 பேர் ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி 50 கிலோ வலையை கடலில் தள்ளிவிட்டனர்.

மேலும் 2 இன்ஜின், 3 செல்போன்கள், டிவி, எக்கோ சவுண்ட், ஜிபிஎஸ், வாக்கி டாக்கி ஆகியவற்றை பறித்து சென்றனர். வேளாங்கண்ணி அருகே செருதூர் சக்திவேல்(33) என்பவரின் பைபர் படகில் சென்ற பரமசிவம்(35), பூம்புகாரை சேர்ந்த சக்திவேல் (33), இளையராஜா(45), கலியமூர்த்தி (48) ஆகிய 4 மீனவர்கள் செருதூர் துறைமுகத்தில் இருந்து கடந்த 2ம் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்தபோது 2 பைபர் படகில் வந்த 4 கடற்கொள்ளையர் தாக்கி ஐஸ்பாக்ஸ், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

அதே போல் செருதூரை சேர்ந்த மாணிக்கவேல் என்பருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 2ம் தேதி சென்ற சற்குணம்(38), சுகந்தன்(39), விஸ்வநாதன்(27), சூசைராஜ்(55), ஏசுதாஸ்(40) ஆகிய 5 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 2 படகில் வந்த 6 பேர் நாகப்பட்டினம் மீனவர்களை தாக்கிவிட்டு சென்றனர். காயமடைந்த 19 மீனவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* 12 அடி நீள அரிவாளால் மிரட்டல்
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் கூறுகையில், ‘மீன்பிடி தடைக்காலம் என்பதால் பைபர் படகுகள் மட்டுமே மீன்பிடிக்க செல்லும். இந்திய நாட்டின் எல்லைக்குள் மீன்பிடித்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கழுத்தில் 12 அடி நீள அரிவாளை வைத்து மிரட்டியும், சில மீனவர்களை கடலில் தள்ளி அச்சுறுத்தியும் பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள், மீன்கள் ஆகியவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.

நமது நாட்டின் எல்லைக்குள் மீன்பிடித்த மீனவர்களை மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த விசயத்தில் தலையிட்டு ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும். கடற்கொள்ளையர்களால் கடலில் தள்ளப்பட்ட மீனவர்கள் நீச்சல் அடித்தும் அந்த வழியாக வந்த மற்ற படகுகள் உதவியுடன் கரை சேர வேண்டிய அபாயநிலை ஏற்பட்டது என்றனர்.

The post நாகையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article