நாகை: நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 11ம் தேதி தேரோட்டம், செடில் உற்சவம் நடக்கிறது. நாகையில் புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை பிரமோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த மாதம் 20ம் தேதி எல்லையம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. 27ம் தேதி பெரிய அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. நேற்றிரவு பூச்செரிதல் விழா நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று(3ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை காலை மயில்வாகனத்திலும், இரவு வேணுகோபாலன் அலங்காரத்திலும் வீதி உலா நடைபெறும். தொடர்ந்து பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி இரவு வசந்த உற்சவம் நடக்கிறது. இதில் அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். 9ம் தேதி இரவு ரிஷபவாகன காட்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் காத்தவராய சாமி செடில் மரத்தில் ஏறும் செடில் உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது. 16ம் தேதி இரவு புஷ்பபல்லக்கு நிகழ்ச்சி மற்றும் 18ம் தேதி உதிரவாய் துடைப்பு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
The post நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றம்: 11ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.