மனைவியுடன் விவாகரத்து கோரியுள்ள நிலையில் 12 ஆண்டாக காதலிக்கும் பெண்ணின் படத்தை வெளியிட்ட லாலு மகன்: பீகார் அரசியலில் பரபரப்பு

4 hours ago 3

பாட்னா: பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், பீகார் மாநில முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், நேற்று வௌியிட்ட சமூக வலைதள பதிவில், ‘நான் தேஜ் பிரதாப் யாதவ், இந்தப் புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் அனுஷ்கா யாதவ். நாங்கள் 12 ஆண்டுகளாக ஒருவரை ஒருவரை காதலித்து வந்தோம்; இருவரும் தற்போதும் தொடர்பில் உள்ளோம். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் அவர் இந்தப் பதிவை நீக்கிவிட்டு, பின்னர் மீண்டும் அதே பதிவை வெளியிட்டார். அனுஷ்கா யாதவ் பற்றி அதிக தகவல்கள் பொதுவெளியில் இல்லை. ஆனால் இந்த அறிவிப்பு அவரை பீகார் அரசியல் வட்டாரத்தில் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக தேஜ் பிரதாப் யாதவ், 2018ம் ஆண்டில் பீகாரின் முன்னாள் முதலமைச்சர் தரோகா ராயின் பேத்தியான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்திருந்தார். ஆனால் அடுத்த ஐந்து மாதங்களில் அவர்களது திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் தம்பதிகள் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் உள்ளது. மேலும் ஐஸ்வர்யா தரப்பில், தேஜ் பிரதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தியதாக புகார்கள் கூறப்பட்டன. அதேநேரம் தேஜ் பிரதாப், ஐஸ்வர்யா தன்னிடம் அதிகப்படியான ஜீவனாம்சம் கோருவதாக குற்றம்சாட்டினார்.

இந்தப் பின்னணியில், அனுஷ்கா யாதவுடனான உறவு குறித்து தேஜ் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும், இந்தாண்டில் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் அவரது அரசியல் பயணத்தையும் பாதிக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மாலத்தீவில் விடுமுறையில் இருக்கும் தேஜ் பிரதாப் யாதவ், இந்த அறிவிப்பின் மூலம் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் வெளியிட்டு பீகாரில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

The post மனைவியுடன் விவாகரத்து கோரியுள்ள நிலையில் 12 ஆண்டாக காதலிக்கும் பெண்ணின் படத்தை வெளியிட்ட லாலு மகன்: பீகார் அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article