பஹல்காமில் நடந்த தாக்குதலின் போது கணவர்களை இழந்த பெண்கள் தீவிரவாதிகளிடம் கைகூப்பி கெஞ்சினர்!: பாஜக எம்பியின் கருத்தால் சர்ச்சை

4 hours ago 2

பிவானி: பஹல்காமில் நடந்த தாக்குதலின் போது கணவர்களை இழந்த பெண்கள் தீவிரவாதிகளிடம் கைகூப்பி கெஞ்சினர் என்று பாஜக எம்பி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம் சந்தர் ஜாங்ரா, பிவானியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தங்களது கணவர்களை இழந்த பெண்கள், வீராங்கனைகளைப் போல தீவிரவாதிகளை எதிர்த்து போராடியிருக்க வேண்டும். அவர்களிடம் வீரமும், ஆவேசமும், தீவிர உணர்வும் இல்லை.

அதனால் தீவிரவாதிகளிடம் கைகூப்பி கெஞ்சி, துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகினர்’ என்று கூறினார். இவரது இந்தக் கருத்து, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகவும், அவர்களை கோழைகளை போன்று சித்தரிப்பதாகவும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாஜக எம்பியின் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் சிங் ஹூடா கூறுகையில், ‘பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் கணவர்களை இழந்த பெண்களின் கண்ணியத்தை பாஜக எம்.பி. ராம் சந்தர் ஜாங்ரா பறித்துவிட்டார்’ என்று பதிவிட்டார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வௌியிட்ட பதிவில், ‘பாஜக எம்பியின் அருவருப்பான இந்த கருத்துக்கு ‘கண்டனம்’ என்ற வார்த்தையால் கூட பதிலளித்தால் சரியாக இருக்காது. பெண்களை மதிக்காமல், அவர்களை அவமானப்படுத்துவதே பாஜக-வின் உண்மையான முகமாக இருந்து வருகிறது’ என்று கூறினார்.

மேலும், காங்கிரஸின் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா நாத் வெளியிட்ட பதிவில், ‘பாஜக தலைவர்கள் சிந்தூர் பற்றி பேசலாமா? வெட்கப்படுவதற்கும் ஒரு எல்லை உள்ளது’ என்று விமர்சித்தார். பாஜக எம்பி ராம் சந்தர் ஜாங்ரா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், ஏற்கனவே பாஜக தலைவர்கள் இந்திய விமானப் பெண் அதிகாரிகளின் ஜாதி, மதம் தொடர்பாக அடையாள கருத்துகளை தெரிவித்து கடும் கண்டனங்களுக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பஹல்காமில் நடந்த தாக்குதலின் போது கணவர்களை இழந்த பெண்கள் தீவிரவாதிகளிடம் கைகூப்பி கெஞ்சினர்!: பாஜக எம்பியின் கருத்தால் சர்ச்சை appeared first on Dinakaran.

Read Entire Article