மதுரை,
நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வாஞ்சி மணியாச்சி ரெயிலில், கோவையைச் சேர்ந்த மேத்யூ, புவிதா தம்பதியினர், தங்களது 4 வயது மகன் ஜெய்சன் மோசஸ் உடன் பயணம் செய்தனர். இந்த நிலையில் ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்தை கடந்த போது, நடுப்படுக்கை சிறுவனின் மீது விழுந்ததில் அவனுக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசார் அதே ரெயிலில் பயணம் செய்த ஒரு டாக்டரின் உதவியுடன் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே, ரெயில் மதுரை ரெயில் நிலையம் வந்தபோது, சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இந்த சம்பவம் ரெயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இதுகுறித்து மதுரை கோட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த சிறுவன் பயணம் செய்த இருக்கை பகுதியில் நடு இருக்கையை சரியாக பொருத்தாததால், கீழே விழுந்து சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இருக்கையில் எந்த கோளாறும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.