
நடந்துவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மிகமுக்கியமான அலுவலாக கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானமே கருதப்படுகிறது. கடந்த புதன்கிழமை அவர், தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கடும் தாக்குதலுக்குள்ளாவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்கவும், இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திடவேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன் என்று சொல்லி தீர்மானத்தை வாசித்தார்.
அவர் அந்த தீர்மானத்தில், 'தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களையும் போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும். இதனை கருத்தில் கொண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசுமுறை பயணமாக இலங்கை செல்லும் இந்திய பிரதமர் அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேசி இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்றும் இப்பேரவை வலியுறுத்துகிறது என்று முன்மொழிந்தார்.
இதேபோல், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1991, 2013 மற்றும் 2016-ம் ஆண்டுகளிலும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2003-ம் ஆண்டிலும், முன்னாள் முதல்-அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம் 2014-ம் ஆண்டிலும், எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டிலும் கச்சத்தீவை திரும்ப பெறக்கோரி தீர்மானங்களை சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றி மத்திய அரசாங்கத்துக்கு வலியுறுத்தினார்கள். ஆக தமிழக சட்டசபையே, கச்சத்தீவை திரும்பப்பெற மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பல முறை தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திரமோடி கருத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
1974-ம் ஆண்டு வரை கச்சத்தீவு முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், 1685-ல் ராஜராஜசோழன் தனக்கு சொந்தமான சேதுநாட்டை நிர்வாகம்செய்ய நியமிக்கப்பட்ட தளபதிகளில் ஒருவரான ரகுநாத சேதுபதியின் அதாவது, ராமநாதபுரம் சேதுபதியின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகத்தான் கச்சத்தீவு இருந்தது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. 1905-ம் ஆண்டு இன்றைய ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நம்புத்தாழை என்ற கிராமத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்ற மீனவர் கச்சத்தீவில் ஒரு அந்தோணியார் கோவிலை கட்டினார். அந்த கோவிலில்தான் இப்போது ஆண்டுதோறும் திருவிழா நடந்து வருகிறது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு சென்று தங்கள் வலைகளை உலர்த்தியும், ஓய்வு எடுத்தும் வந்தனர்.
1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தோடு அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களினால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அதில் இருந்து கச்சத்தீவு பக்கம் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சொல்லொண்ணாத் துயருக்குள்ளாகிறார்கள். காங்கிரஸ் அரசாங்கம் செய்த பல நடவடிக்கைகளை ரத்துசெய்யும் பா.ஜனதா அரசாங்கம், அப்போது தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவையும் மீட்கவேண்டும். அதற்கு இன்று இலங்கைக்கு செல்லும் பிரதமர் நரேந்திரமோடி முதல் முயற்சியை தொடங்கவேண்டும். அது சாத்தியம் இல்லையென்றால், ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி, நீண்டகால குத்தகைக்கு எடுக்கவேண்டும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.